Published : 24 Aug 2020 01:21 PM
Last Updated : 24 Aug 2020 01:21 PM
அறிவியலில் கிராமக் குழந்தைகளை மேம்படுத்தி விருதுகளைப் பெற ஊக்குவிக்கும் புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார், தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினத்தன்று இந்திய அளவில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக இவ்விருதினை நேர்முகத் தேர்வு வழியாக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் நாடு முழுதும் 47 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் புதுச்சேரி ஆசிரியரும் ஒருவர்.
இந்த வருடம் புதுச்சேரி காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ராஜ்குமார் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்துப் பள்ளி மற்றும் கிராமத் தரப்பில் கூறுகையில், "நீண்டகால அறிவியல் ஆராய்ச்சித் திட்டம் அடிப்படையில் ஆசிரியர் ராஜ்குமார் மாணவர்களுக்கு அறிவியலைக் கற்றுத் தருகிறார். இதனால் மூன்று வருடங்களாகத் தொடர்ந்து தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் கிராமப் பகுதியிலுள்ள இப்பள்ளி மாணவர்கள் புதுச்சேரி சார்பாகப் பங்கேற்றனர்.
பாரிஸ் பல்கலைக்கழகம் நடத்தும் அறிவியல் உருவாக்குவோம் என்ற போட்டியில் கடந்த ஐந்து வருடங்களில் இரண்டு முறை முதல் பரிசு பெற்றனர். மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் இப்பள்ளியின் அறிவியல் கழகத்தை "கோல்டு கேட்டகரி" ஆக அறிவித்துள்ளது.
இப்பள்ளியின் மாணவர்கள் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை மூலம், மடிப்பு நுண்ணோக்கி (Foldscope) என்ற ஆய்வுத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தினர். ஆதலால் அசாமில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு விமானம் மூலம் சென்று அங்குள்ள உயிரியல் பூங்கா மற்றும் மலைப்பகுதிகளில் தங்கள் ஆராய்ச்சியைச் செய்தனர்.
அறிவியலில் சிறந்து விளங்கிய மாணவி மனிஷா இந்திய அரசின் கல்வித்துறையின் கீழ் அறிவியல் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக ஜப்பான் பயணம் மேற்கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பள்ளியின் மாணவர்கள் இந்தியாவின் 9 மாநிலங்களில் தங்கள் அறிவியல் ஆய்வினைக் கட்டுரைகளாகச் சமர்ப்பித்துள்ளனர். ஆசிரியர் ராஜ்குமார் அறிவியல் கண்காட்சியில் ஆசிரியர் பிரிவில் ஒவ்வொரு வருடமும் மாநில அளவு மற்றும் மாவட்ட அளவில் பரிசுகளைப் பெற்றுள்ளார்" என்று குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக விருதுக்குத் தேர்வாகியுள்ள ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில், "தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக எங்கள் குழந்தைகள் பரிசுகளை வென்றுள்ளனர். இதுவரை எங்கள் குழந்தைகள் ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் வரை ரொக்கப் பரிசை வென்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றனர். இதர கல்வியாண்டுகளில் பல நூற்றுக்கணக்கான விருதுகளை வென்றனர்.
கரோனா காலத்தில் சூரியனை வைத்துப் பொது அறிவியல் வகுப்புகளை நடத்தத் தொடங்கினேன். பலரிடம் செல்போன் இல்லாததால் முகநூலில் பதிவிட்டேன். அதில் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் இணைந்தனர். தண்ணீர் சேமிப்பு தொடர்பான பல முயற்சிகளும், தண்ணீர் சேமிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளும் இவ்விருதுக்கு முக்கியக் காரணம். இவ்விருதுக்குக் காரணம் எங்கள் பள்ளிக் குழந்தைகள்தான்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT