Published : 20 Aug 2020 06:51 PM
Last Updated : 20 Aug 2020 06:51 PM
திருப்பத்தூர் அடுத்த ராஜாவூர் அரசுப் பள்ளியில் சேர்க்கைக்காக வந்த மாணவர்களுக்கு மலர் கிரீடம், மலர் மாலை அணிவித்து பழ தட்டுகள் கொடுத்து பள்ளி தலைமை ஆசிரியை வரவேற்ற சம்பவம் பெற்றோர்களை நெகிழ வைத்தது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே ராஜாவூர் அரசு தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அதிக மாணவர்களை சேர்ப்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார், பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா.
ராஜாவூர் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், 2020 - 21 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை சேர்ப்பதற்காக பள்ளியில் நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிய மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வரும் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கடந்த ஒரு மாதமாக ராஜாவூர் பகுதிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளுக்கு நேரில் சென்று, கரோனா நோய் பரவல் குறைந்த உடன் மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். அதன்படி, கடந்த 17-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருப்பத்தூர் அடுத்த ராஜாவூர் அரசு தொடக்கப்பள்ளியிலும் கடந்த 17-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. 3 நாட்களாக குறைவான அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில், இன்று (ஆக. 20) அரசுப்பள்ளியில் சேர்க்கைக்காக அழைத்து வரப்பட்ட புதிய மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் இந்திரா, மலர் கிரீடம், மலர் மாலை, பழத்தட்டுகள் கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு, புதிய மாணவர்களுக்கு விலையில்லா புதிய பாட புத்தகங்களை வழங்கினார். இதைக் கண்ட பெற்றோர் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கூறுகையில், "ராஜாவூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, பாடத்திட்டத்தையும் தாண்டி, மாணவர்களுக்கு பனை ஓலையில் கலைநயம் படைப்பது, நாளேடுகளில் வாரந்தோறும் வரும் சிறுவர் மலர் புத்தகத்தைப் பிழையின்றி படிக்கச் செய்தல், பறவைகளுக்கான நீர் மேடை அமைத்தல், மரம் வளர்த்தல், இருப்பிடங்களை தூய்மையாக வைத்திருத்தல், தமிழர் வரலாறு, உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்கிறோம். இதற்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசு தொடக்கப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இயற்கை சூழ்ந்த பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ராஜாவூர் பள்ளியில் சில கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டு மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவித்துள்ளோம்.
மேலும், மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியுடன் பாடத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறோம். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சங்ககால இலக்கியங்கள், சித்தர் பெயர்கள், நோய் தீர்க்கும் மூலிகைச்செடிகளில் பெயர்களை தடையின்றி கூறும் அளவுக்கு உயர்த்தியுள்ளோம். இதனால், இப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் கொண்டுள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT