Last Updated : 19 Aug, 2020 05:01 PM

 

Published : 19 Aug 2020 05:01 PM
Last Updated : 19 Aug 2020 05:01 PM

இணையத்தில் கரோனா விழிப்புணர்வு நாடக அரங்கேற்றம்: புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் அசத்தல்

தனிமனித இடைவெளியை நாடகத்தில் பின்பற்றி டிஸ்டன்ஸ் தியேட்டர் (Distance Theatre) என்ற புதிய அரங்க யுக்தியை பயன்படுத்தி இணையத்தில் அரங்கேற்றிய தொற்று நாடகம்.

புதுச்சேரி

இணையதளத்தில் தொற்று விழிப்புணர்வு நாடகத்தை புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் உள்ள “ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பு” (Research Scholars Forum) கரோனா கால ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதனை எதிர்கொள்ளும் மக்கள் தன்னம்பிக்கையோடு, சகமனிதத் தோழமையோடு வாழ்வது குறித்தும் “தொற்று” என்கிற கரோனா குறித்த விழிப்புணர்வு நாடகத்தை ஒரு மாத ஒத்திகையில் உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாக தனிமனித இடைவெளியை நாடகத்தில் பின்பற்ற டிஸ்டன்ஸ் தியேட்டர் (Distance Theatre) என்ற புதிய அரங்க யுக்தியை மாணவர்கள் இந்நாடகத்தில் கையாண்டுள்ளனர். புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத்துறையின் வெளியீடாக வலைதளம், யூடியூப், முகநூல் ஆகிய சமூக ஊடகங்களின் வழியே மேடையேற்றினர்.

அதைத்தொடர்ந்து நிகழ்கலைத்துறை ஆய்வு மாணவர்கள் அழிந்துவரும் மரபு கலையான தோற்பாவை கூத்தின் மூலம் இந்தி மொழியில் கரோனா பற்றிய விழிப்புணர்வை “ஜீவன்” என்ற கருத்தாக்கத்தில் இணையதளம் மூலம் நிகழ்த்தியுள்ளனர்.

மரபு கலையான தோற்பாவை கூத்தின் மூலம் இந்தி மொழியில் கரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி “ஜீவன்”

நாடக நிகழ்வையும் தோற்பாவை கூத்தையும் புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைத் துறையின் புலமுதன்மையர் பேராசிரியர் ராமையா இணையத்தில் தொடங்கிவைத்தார். இந்நாடகநிகழ்வின் இன்றைய அவசியம் குறித்துத் துறைத் தலைவர் பேராசிரியர் ராஜாரவிவர்மா விளக்கமளித்தார். இந்நாடக நிகழ்வை கடந்த ஒரு மாதகாலமாக ஒருங்கிணைத்த பேராசிரியர் முருகவேல் உரையாற்றினார்.

நாடகத்தை நிகழ்த்திய மாணவர்களும், பேராசிரியர்களும் கூறுகையில், "கரோனா பெருந்தொற்று கொள்ளை நோயாக உருமாறிக் கடந்த பலமாதங்களாக மானுட சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பொருளாதார நிலையிலும் பல்வேறு இடர்ப்பாடுகளை மக்கள் சந்தித்துவருகிறார்கள். உலகமே பேரிடரால், பெருந்துயரால் தள்ளாடுகின்ற வேளையில் கலைஞன் மட்டுமே மக்களை ஆசுவாசப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான்.

அதையொட்டி அமைக்கப்பட்ட நாடகத்தின் மையக்கருவென்பது கொள்ளை நோய், பெருந்தொற்று போன்றவை இன்றைக்கோ, நேற்றோ புதிதாக வந்ததல்ல; தொன்றுதொட்டு ஆதிகாலம்முதல் கொள்ளைநோய்கள் பரவலாக மனித சமூகத்தை அச்சுறுத்தியுள்ளன. அதனைக் காலம் காலமாக மக்கள் நம்பிக்கையுடனும், பாதுகாப்பு அம்சங்களுடனும் எதிர்கொண்டு கடந்து வந்திருக்கிறார்கள் என்பதை நமக்கு மனிதகுலவரலாறு அறிவிக்கிறது.

ஆனால் தற்காலச்சூழலில் நவீன உலகின் விஞ்ஞான வளர்ச்சியில் வாழும் நாம் ஒரு சிறு தொற்றை விரட்டமுடியாத, மக்களைப் பாதுகாக்க முடியாத தவிப்பில், நமது வளர்ச்சியுகம் திண்டாடுவதையும் அனைத்தும் வியாபாரமயமாக்கப்பட்ட சூழலையும் விளக்கும் வகையில் இந்நாடகம் அமைந்துள்ளது. மேலும் விழிப்புணர்வுடன், தன்னம்பிக்கையோடு இற்கையை புரிந்து வாழ இந்நாடகம் வழிசொல்கிறது.

இவ்விரண்டு நிகழ்வுகளையும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இணையதளத்தில் கண்டுகளித்து, வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x