Published : 19 Aug 2020 04:11 PM
Last Updated : 19 Aug 2020 04:11 PM
கலை,அறிவியல் கல்லூரி வளாகத் தேர்வில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்.
பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் மட்டுமே வளாகத்தேர்வு (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் தனியார் நிறுவனங்கள் ஆட்கள் தேர்வு செய்யும் நடைமுறை மாறி, கலை, அறிவியல் கல்லூரிகளிலும் வளாகத் தேர்வுகளை நடத்தி தங்களுக்குத் தேவையான ஆட்களை தேர்ந்தெடுக்கிறது என்றாலும், மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத் தேர்வுக்கென பிரத்யேக கவனம் செலுத்துகிறது.
வங்கி, ஐடி, இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருகின்றனர். இதற்குத் தேவையான தகவல் தொடர்பு, மொழி அறிவுத்திறன் உள்ளிட்ட தகுதிக்கான பயிற்சிகளை அளிக்க, சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து, கல்லூரி செயலர் க. ஹரி தியாகராசன் கவனம் செலுத்துகிறார்.
இக்கல்லூரியில் 4 ஆண்டாக பைஜூஸ் என்ற கல்விப் பயிற்சி நிறுவனம், எல்என்டி, புளு-ஸ்டார் இந்தியா, விப்ரோ, ஜூகோ, எச்சிஎல், ஐசிஐசிஐ, சவுத் இந்தியன் வங்கிகள், தொழில்நுட்பம், மருத்துவம், இன்சூரன்ஸ், பைனான்ஸ் போன்ற 15-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் வளாகத்தேர்வில் தெடர்ந்து பங்கேற்றன.
இதன்மூலம் 2017ல் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் சம்பளம் தொடங்கி 537 பேரும், 2018ல் சவுத் இந்தியன் வங்கியில் ஆண்டுக்கு ரூ.4.75 லட்சம் சம்பள விகிதத்தில் துவங்கி 618 பேரும், 2019-ல் அதிக பட்சமாக ரூ.5.75 லட்சம் ஊதியம் முதல் அடுத்தடுத்த ஊதிய விகிதத்தில் 512 பேரும் தேர்வாகி பணிபுரிகின்றனர்.
இதன்படி, 2020-ல் கரோனா ஊரடங்களிலும் நடந்த ஆன்லைன் வளாகத் தேர்வில் இக்கல்லூரியைச் சேர்ந்த பிஎஸ்சி தகவல் தொழில் நுட்பத்துறையில் பயின்ற கோவில்பட்டி மாணவர் சி. வர்த்தமான் சங்கர் பைஜூஸ் நிறுவனத்தில் (மார்க்கெட்டிங் நிர்வாகி) ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் சம்பளத்தில் தேர்வாகி, கல்லூரிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஏற்கெனவே இவர் டிசிஎஸ் உள்ளிட்ட இருநிறுவனங்களுக்கும் தேர்வானார். இவருடன் 326 பேர் இவ்வாண்டு வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். வளாகத்தேர்வில் இதுவரை அதிக சம்பளத்தில் வர்த்தமான் சங்கர் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. 4 ஆண்டில் மட்டும் இளநிலை, முது கலை கல்வியை முடிக்கும் முன்பே வங்கி உட்பட பல்வேறு நிறுவனங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை இக்கல்லூரி நிர்வாகம் உருவாகித் தந்துள்ளது.
வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் தொடர்ந்து இக்கல்லூரிச் செயலர் ஹரிதியாகராசன், முதல்வர் பாண்டிராஜா, கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் ராஜேஷ் செயல்படுகின்றனர்.
வர்த்தமான் சங்கர் கூறுகையில், ‘‘ . வேலை வாய்ப்புக்கான மொழித்திறன் உள்ளிட்ட பயிற்சி அளித்ததால் வெற்றி பெற்றேன். கலை, அறிவியல் கல்லூரியில் படித்த என்னைப் போன்ற பலர் நல்ல வேலை வாய்ப்பை பெற்றுள்ளோம். இதற்காக கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT