Published : 19 Aug 2020 02:36 PM
Last Updated : 19 Aug 2020 02:36 PM
மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள இணையவழி கற்றல் வகுப்புகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து வகை கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் கல்வியாண்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாமல் உள்ளன.
ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கின்றன. நிர்வாகப் பணிகள் மட்டும் மிகவும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளிப்போவதால், கல்வியாண்டில் மாற்றம் கொண்டுவதற்கான முயற்சிகளையும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக கற்றல், கற்பித்தலின்றிக் கால விரயம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு அவரவர்களின் இருப்பிடங்களில் இருந்தவாறே இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்த, இணையவழிக் கற்றலை தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. இணையதள வகுப்புகளை நடத்தும் கல்லூரிகளை ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு கல்லூரிகளில் இணையதள வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில் இணையதள வகுப்புகள் தொடங்கப்பட்டு, 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான பாடங்கள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் தி.சுகுமாரன் கூறியதாவது:
’’இக்கல்லூரியில், பி.ஏ. பொருளியல், ஆங்கில இலக்கியம், சுற்றுலாவியல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை, பி.காம்., பி.காம். சி.ஏ., பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் ஆகிய 7 இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு 850 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
உயர் கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி, இங்கு படிக்கும் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு இணைதயள வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் அடிப்படையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். ஆசிரியர்களும் சிறப்பாக வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
இங்கு கிராமம் மலைப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். அவர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன், இணையதள வசதி போன்றவை இல்லை. இதனால் அருகருகே வசிக்கும் மாணவர்களை ஒரே இணைப்பில் ஒருங்கிணைத்து வகுப்புகள் நடத்துகிறோம். சில மாணவர்களுக்கு இந்த வசதியும் இல்லை.
இதனால் பாடங்களை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 50 முதல் 60 சதவீதம் மாணவர்கள் இணையதள வகுப்பில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கான வருகைப் பதிவும் ஆசிரியர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது’’.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT