Published : 18 Aug 2020 12:34 PM
Last Updated : 18 Aug 2020 12:34 PM
கரோனாவால் பெற்றோர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் மதுரை அருகே திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்த ஆண்டு ஒரு ரூபாய்கூட கல்விக் கட்டணம் பெறாமல் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான மாணவர்களின் கல்வி கட்டணம் அனைத்தையும் அப்பள்ளி ஆசியர்களே ஏற்றுக் கொண்டனர்.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி (இருபாலர்) உள்ளது. இந்தப் பள்ளி 1961-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1980-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாக இருந்த இந்த பள்ளி கடந்த 2019-ம் ஆண்டில் இரு பாலர் பள்ளியாக மாற்றப்பட்டது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 94 சதவீதத் தேர்ச்சியும், பிளஸ்1 தேர்வில் 97% தேர்ச்சியும் பெற்றுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை, எளிய மாணவர்களே படிக்கின்றனர். அதுவும், திருமங்கலம் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மேல்நிலைக் கல்விக்காக இந்தப் பள்ளியே சார்ந்துள்ளனர். இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர், தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளுக்குச் சென்றுள்ளனர். ஏற்கெனவே இந்தப் பள்ளியில் தங்களிடம் படித்து சிறப்பான மதிப்பெண் பெறும் மாணவர்களின் கல்லூரிப் படிப்புகளுக்கு ஆசிரியர்கள் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனாவால் மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். அதனால், திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்1 வரை சேரும் அனைத்து மாணவர்களிடம், ஆசிரியர்கள் எந்தக் கட்டணமும் பெறாமல் மாணவர்சேர்க்கை நடத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே சேர்த்து செலுத்துவது என முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பள்ளி ஆசிரியர் பி.பாஸ்கர் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி என்பதால் கல்விக் கட்டணம் இருக்காது. ஆனால், அரசு பெற்றோர் கழக நிதியாக மாணவர்களிடம் ஆண்டிற்கு 50 ரூபாயும், வினாத்தாள் தயாரிக்கவும், விடைத்தாள் வாங்குவதற்கும் ஒவ்வொரு மாணவர்களிடம் மாணவர் சேர்க்கை சமயத்தில் ரூ.60 முதல் ரூ.150 ரூபாய் வரை ஒவ்வொரு வகுப்பிற்கு கல்விக் கட்டணம் பெறுவதற்கு கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது கரோனாவால் அனைத்து பெற்றோர்களும் வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள். மறுபடியும், மாணவர் சேர்க்கை என்ற வகையில் சிரமப்படுத்தக்கூடாது என்பதால் ஆசிரியர்கள் சேர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் ஆகும் கல்விக் கட்டணத்தைக் கட்டுகிறோம். எங்கள் பள்ளியில் 330 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக் கட்டணமான ரூ.50 ஆயிரத்தை ஆசிரியர்களே பகிர்ந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT