Published : 17 Aug 2020 08:06 AM
Last Updated : 17 Aug 2020 08:06 AM

அங்கீகாரம் பெற்றதாக, விருப்பமான படிப்பாக இருப்பது அவசியம்; மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு 100 சதவீதம் உறுதி- ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு 100 சதவீதம் உறுதி என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் மருத்துவத் துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உரையாற்றி வருகின்றனர். உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 14-ம் தேதிநடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி: பொதுவாக பிளஸ் 2முடிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்றால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மட்டுமே தெரிகின்றன. ஆனால், இவற்றுக்கு நிகரான மருத்துவப் படிப்புகள், மருத்துவம் சார்ந்த இதர படிப்புகள் ஏராளமாக உள்ளன. சித்தா, ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகியவற்றிலும் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், ‘பிஒய்என்எஸ்’ என்று அழைக்கப்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கு வெளிநாடுகளில் நல்ல தேவை இருக்கிறது. இந்த படிப்புக்கு நீட் தேர்வு கிடையாது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது மட்டுமின்றி, பி.ஃபார்ம். (பார்மசி), பிபிடி (பிசியோதெரபி), பிஓடி(ஆக்குபேஷனல் தெரபி) போன்ற பட்டப் படிப்பு வாய்ப்புகளும் மாணவர்களுக்கு உள்ளன. நர்ஸிங்கில் பி.எஸ்சி. அல்லது டிப்ளமா படிக்கலாம்.

இதுதவிர, பி.எஸ்சி.யில் ஆக்சிடென்ட் அண்ட் எமர்ஜென்ஸி கேர் டெக்னாலஜி, கார்டியாலஜி, மெடிக்கல் ரெக்கார்ட், ஆபரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்தீஷியா டெக்னாலஜி, பிசிசியன் அசிஸ்டென்ட், ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி, புரோஸ்தெடிக்ஸ் அண்ட் ஆர்த்தோடிக்ஸ், ஆப்டோமெட்ரி, மைக்ரோ பயாலஜி, ஸ்போர்ட்ஸ் மெடிசின், நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ், ஃபிட்னஸ் அண்ட் லைஃப்ஸ்டைல் மாடிஃபிகேஷன் மற்றும் பேச்சிலர் ஆஃப் ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லாங்வேஜ் பேத்தாலஜி என ஏராளமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன.

தற்போது புதிதாக, பிபிஏ ஆஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், பிஎஸ்சி பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் போன்ற படிப்புகளும் வந்துள்ளன. பல் மருத்துவத் துறையில் டென்ட்டல் ஹைஜீனிஸ்ட், டென்டல் ஆபரேஷன் ரூம் அசிஸ்டென்ட், டென்டல் மெக்கானிக்ஸ் போன்ற டிப்ளமா படிப்புகள் முக்கியமானவை. மேலும், மருத்துவம் சார்ந்த பிரிவுகளில் ஏராளமான டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவற்றில் சேர்ந்தால் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு 100 சதவீதம் உறுதி.

மாணவர்கள் குறிப்பிட்ட படிப்பில் சேரும் முன்பு, அது பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற படிப்பா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், படித்த படிப்பு செல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) தர மேலாளர் டாக்டர் லாலு ஜோசப்: மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பு எது என்பதை தேர்வுசெய்து படிக்க வேண்டும். அப்போதுதான் பின்னாளில் அந்த துறையில் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், உற்சாகம் நிறைந்ததாகவும் இருக்கும். பெற்றோர் சொன்னார்கள், நண்பர்கள் கூறினார்கள் என்று, விருப்பம் இல்லாத படிப்பில் ஒருபோதும் சேர்ந்துவிடாதீர்கள். மருத்துவத் துறையில் உடனடி வேலைவாய்ப்பு தரக்கூடிய ஏராளமான மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன.

நர்ஸிங் படிப்புக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதை டிப்ளமா அல்லது பி.எஸ்சி. பட்டப் படிப்பாக படிக்கலாம். இதில் எம்.எஸ்சி., பிஎச்.டி.என மேற்படிப்புக்கும் வாய்ப்பு இருக்கிறது. மருத்துவம் சார்ந்த துறைகளில் ஏராளமான டிப்ளமா படிப்புகள் உள்ளன. ஆக்சிடென்ட் அண்ட் எமர்ஜென்ஸி கேர் டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்ஃபியூஷன் கேர் டெக்னாலஜி, க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்தீஷியா டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கு நல்ல தேவை உள்ளது.

மெடிக்கல் லேப் டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி, ரேடியோகிராபி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, நியூக்ளியர் மெடிசின் டெக்னாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி, நியூரோ-எலெக்ட்ரோ பிசியாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, டயட்டிக்ஸ், மெடிக்கல் சோஷியாலஜி, மெடிக்கல் ரெக்கார்ட் சயின்ஸ், மெடிக்கல் இன்ஃபோமேட்டிக்ஸ், ஹாஸ்பிட்டல் ஸ்டெர்லைசேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளிலும் மாணவர்கள் சேரலாம். கூடுமானவரை மருத்துவம் சார்ந்த படிப்புகளில் பட்டப் படிப்பு, டிப்ளமா நிலையில் சேருவதுநல்லது.

சென்னை பாரத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் ஏ.எட்வின் ஜோ: அலைடு ஹெல்த் சயின்ஸ் எனப்படும் மருத்துவம் சார்ந்தபடிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. பி.எஸ்சி. நர்ஸிங்படிப்புக்கு வெளிநாடுகளில் வாய்ப்புகள் அதிகம். மாணவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் படிப்பை தேர்வுசெய்ய வேண்டியது முக்கியம்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சில படிப்புகளுக்கு மன தைரியம் வேண்டும். உதாரணத்துக்கு, பி.எஸ்சி. அனஸ்தீஷியா அண்ட் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, பெர்ஃபியூஷன் கேர் டெக்னாலஜி போன்ற படிப்புகளைக் குறிப்பிடலாம். பி.எஸ்சி. ஆக்சிடென்ட் அண்ட் எமர்ஜென்ஸி கேர் டெக்னாலஜி படித்தால் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிகிரி, டிப்ளமா, சான்றிதழ் என பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டாலும் மாணவர்கள் கூடுமானவரை டிகிரி, டிப்ளமா படிப்புகளில் சேருவது நல்லது. சான்றிதழ் படிப்பு என்பது கடைசி வாய்ப்பாக இருக்கட்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறைவாக, மாணவர்களின் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இணையத்தில் காணலாம்

இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இணைந்து நடத்தியது. இதில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/2Y4QLn1 என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x