Published : 11 Aug 2020 07:43 AM
Last Updated : 11 Aug 2020 07:43 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கரோனா அச்சத்தால் பொதுத் தேர்வு நடத்தப்படாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தை பிடித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதாக இருந்தது. அதற்குள் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. பின்னர், ஜூன் 1-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றனர். எனவே 10-ம்வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 9-ல் உத்தரவிட்டார். காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள், மாணவர்களின் வருகை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்து, அனைத்துமாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழகத்திலேயே காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 52,741 மாணவ, மாணவிகள் 10-ம்வகுப்பு பயின்றனர். இவர்களில் 26,701 பேர் மாணவர்கள். 26,040 பேர் மாணவிகள். அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் 10-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாவட்டம் என்ற பெருமையை காஞ்சிபுரம் பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தின் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை நேற்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களான திருவரசு (மேல்நிலைப் பள்ளிகள்), மலர்கொடி (உயர்நிலைப் பள்ளிகள்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: 2019-20 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்ற 24,547 மாணவர்கள், 24,403 மாணவிகள் என 48,950 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 242 அரசுப் பள்ளிகளின் 18,157 மாணவர்களும்முழுமையாக தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், 263 மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT