Published : 10 Aug 2020 06:56 AM
Last Updated : 10 Aug 2020 06:56 AM

பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் படித்தால் சமூகத்துக்கு உதவும் மகிழ்ச்சி.. ஏராளமான வேலைவாய்ப்புகள்- ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தகவல்

சென்னை

பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் துறைகளில் உள்ள படிப்புகள், அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து ‘இந்து தமிழ்திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இணைய வழியிலான இந்த நிகழ்ச்சி கடந்த ஜூலை 24-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறை நிபுணர்கள் உரையாற்றி வருகின்றனர். உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த 7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங், பயோ-டெக்னாலஜி குறித்து நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

கோவை ஜெம் மருத்துவமனையின் ஜெம் இன்ஸ்டிடியூட் ஃபார் கேஸ்ட்ரோ என்டராலஜி, லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரும், ஜெம் மருத்துவமனை குழுமத்தின் தலைவருமான டாக்டர் சி.பழனிவேலு: பயோ-டெக்னாலஜி துறையானது புளூ பயோ-டெக்னாலஜி (கடல்வாழ் உயிரினம்), கிரீன் பயோ-டெக்னாலஜி (விவசாயம்), ஒயிட் பயோ-டெக்னாலஜி (மருத்துவம், தொழில்துறை) என 3 பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய துறை ஆகும். ஃபார்மாசூட்டிகல் எனப்படும் மருந்து தயாரிப்புத் துறையில் பயோ-டெக்னாலஜி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் 50 சதவீத தடுப்பு மருந்துகள் இந்தியாவில்தான் தயாராகின்றன. உலகின் 230 நாடுகளுக்கு மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயோ-டெக்னாலஜி தொடர்பான தேசிய ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. ஃபார்மாகாலஜி, ஜீன் தெரபி, ஸ்டெம்செல், திசு இன்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் பெரும் பங்கு வகிக்கின்றன.

தற்போது மருத்துவத் துறையில் நோய் கண்டறிதலிலும், அறுவை சிகிச்சையிலும் ‘ஏ.ஐ.’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயோ-டெக்னாலஜி துறை ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற அளவில் மிக வேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் மருத்துவ சுற்றுலா கேந்திரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இங்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை கிடைப்பதால் உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இந்தியாவுக்கு வருகின்றனர். இத்தகைய காரணங்களால் பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் காலங்களில் மேலும் புதுப்புது வாய்ப்புகளும் உருவாகும்.

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பயோ-இன்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் பி.பிருந்தாதேவி: பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு என்பது அறிவியலும், தொழில்நுட்பமும் கலந்த படிப்பாகும். சமுதாயத்துக்கு தேவையான மருந்துகளையும், மருத்துவ சாதனங்களையும் வழங்குபவர்கள் இந்த துறையினர்தான். பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்தவர்கள் பிடெக் பயோ-டெக்னாலஜி, பி.இ. அல்லது பி.டெக். பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகளில் சேரலாம். உயிரியல் பாடத்துக்கு பதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படித்தவர்களும் இப்படிப்புகளில் தாராளமாக சேரலாம். பி.டெக். முடித்துவிட்டு ஏதாவது ஒரு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற வேண்டும். அதன்பிறகு வேலையில் சேரலாம், அல்லது மேற்படிப்பை தொடரலாம். ஜெனிட்டிக் இன்ஜினீயரிங், ஜீன் எடிட்டிங், பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டேஷனல் பயாலஜி, மைக்ரோ-பயாலஜி, வைராலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் மேற்படிப்பு படிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பது நல்லது.

தகவல்தொடர்பு திறன், இத்துறையில் ஒருங்கிணைந்த அறிவு, துறையில் ஏற்பட்டுள்ள சமீபகால முன்னேற்றங்கள் போன்ற திறமைகளையும் பயோ-டெக்னாலஜிஸ்ட்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவோர் பிஎச்.டி. படிக்கலாம். யுஜிசி, சிஎஸ்ஐஆர், மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை (டிபிடி) நடத்தும் ஃபெல்லோஷிப் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றால் கல்வி உதவித் தொகையுடன் முதுகலை மற்றும் பிஎச்.டி. படிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் படிக்க விரும்புவோர் ஜிஆர்இ, டோஃபல் தேர்வுகள் எழுதி எம்.எஸ்., பிஎச்.டி. படிக்கலாம். வெளிநாடுகளில் முதுகலை, பிஎச்.டி. படிப்புகளுக்கு ஆகும் முழு செலவையும் ஏற்கக்கூடிய கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களும் இருக்கின்றன.

தொழில்துறை வேலைவாய்ப்பு என்று பார்த்தால் சயின்டிஃபிக் ரைட்டர், பயோ-டெக்னாலஜிஸ்ட், ஆராய்ச்சி உதவியாளர், பயோ-இன்ஃபோமேட்டிஷியன் போன்ற பணிகளில் சேரலாம். மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தற்போதைய கரோனா பெருந்தொற்று காலத்தில் பயோ-டெக்னாலஜி துறைக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. எனவே, பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங்கில் பி.டெக்., எம்.டெக்., பிஎச்.டி. என்று எது படித்திருந்தாலும் வரும்காலத்தில் வேலைவாய்ப்புகளுக்கு குறைவே இருக்காது.

சென்னை சிஃபோ ஆர்என்டி சொலூஷன்ஸ் இணை நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான ராஜ் பிரகாஷ்: பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் ஆகியவை உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பான படிப்புகள் ஆகும். மனித சமுதாயத்துக்கு உதவி செய்கிறோம் என்பதுதான் இத்துறை தரும் பெரிய சந்தோஷம். 25 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய துறைதான் என்றாலும், இன்றைய சூழலில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறையாக மாறியுள்ளது. இத்துறை மீது ஆர்வம் உடையவர்கள்தான் இப்படிப்பை தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஆய்வகப் பரிசோதனை, அவ்வப்போது ஏற்படும் புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். இத்துறையில் நாளுக்கு நாள் நடக்கும் மாற்றங்கள், வளர்ச்சிகள் குறித்து ஆர்வம், உற்சாகத்தோடு தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால்தான் இத்துறையில் சிறந்து விளங்க முடியும்.

மனித சமுதாயத்துக்கு தேவையான புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கும், புதிய மருத்துவ உபகரணங்களை உருவாக்குவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை இத்துறை வழங்கும். தற்போதைய சூழலில், பயோ-டெக்னாலஜி படிப்பவர்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறைவாக, மாணவ, மாணவிகள், பெற்றோரின் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

இணையத்தில் காணலாம்

இணைய வழியில் நடந்த இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/33FsO9l என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

கட்டணம் இல்லை

‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x