Published : 07 Aug 2020 04:59 PM
Last Updated : 07 Aug 2020 04:59 PM

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஆக.10-ம் தேதி வெளியீடு: அரசு அறிவிப்பு

சென்னை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே, மார்ச் 27 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2020 பருவத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் தங்களின் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2020 தொடர்பான தேர்வு முடிவுகள் 10.08.2020 (திங்கட்கிழமை) அன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

1. http://www.tnresults.nic.in/

2. www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in

குறுஞ்செய்தி வழியாகத் தேர்வு முடிவு

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாகத் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக, மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், 17.08.2020 முதல் 25.08.2020 வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினைப் பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணைய தளம் (www.dge.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல்

17.08.2020 முதல் 21.08.2020 வரையிலான நாட்களில் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் வழியாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x