Published : 07 Aug 2020 03:53 PM
Last Updated : 07 Aug 2020 03:53 PM
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது என்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகளை நடத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாகக் கல்வித் துறை சார்பில் பெற்றோரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோபிச்செட்டிப் பாளையத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர் கூறும்போது, ''பள்ளிகள் திறப்பைப் பொறுத்தவரை பெற்றோரின் கருத்து, மாணவர்களின் சூழல் கருத்தில் கொள்ளப்படும். கரோனா வைரஸ் பரவல் படிப்படியாகக் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்.
தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக ஆகஸ்ட் 10-ம் தேதி முதல்வர் அறிவிப்பு வெளியிட உள்ளார். புத்தகப் பைகள், காலணிகளைப் பள்ளி மாணவர்கள் பெற்றுக்கொள்வது குறித்தும் அதே நாளில் அறிவிப்பு வெளியிடப்படும்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT