Published : 07 Aug 2020 02:11 PM
Last Updated : 07 Aug 2020 02:11 PM
தேசத்தின் திறமையைத் தக்கவைத்துக் கொள்ள புதிய கல்விக் கொள்கை உதவும் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வித்துறையில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் என்னும் தலைப்பில் மத்தியக் கல்வி அமைச்சகம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாது:
''கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மூலம் நாட்டுக்கு நல்ல மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், குடிமக்கள் கிடைப்பார்கள். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
இதனால் தேசிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களின் தகுதிக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் பயிற்சிக்கு அதிகக் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களின் திறமைகளைத் தொடர்ந்து உயர்த்திக்கொள்ள முடியும். ஆசிரியர்கள் கற்றால் தேசம் மேம்படும்.
இன்று நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. வெவ்வேறு துறைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்ட மக்கள், கல்விக் கொள்கை குறித்த தங்களின் பார்வைகளை முன்வைத்து வருகிறார்கள். இது ஆரோக்கியமான முறையாகும். இதன் மூலம் நாட்டின் கல்வி அமைப்பு மேம்படும்.
கல்விக் கொள்கை ஒரு பக்கச் சார்புடையதாக இருப்பதாக யாருமே கூறவில்லை. இது பெரிய விஷயம். இப்போது எல்லோரின் கவனமும் கல்விக் கொள்கை எப்படி அமல்படுத்தப்படும் என்பதில்தான் இருக்கிறது.
மாணவர்கள் தங்களின் தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் கற்கும்போது, பாடம் குறித்த அவர்களின் புரிதல் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிப்பது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கல்வியின் நோக்கம் திறமையும் நிபுணத்துவமும் வாய்ந்த மனிதனை உருவாக்குவதாகும். கல்விக் கொள்கையில் ஏராளமான நுழைவு மற்றும் வெளியேறல் தெரிவுகள் இதை உறுதி செய்யும். இதன்மூலம் வாழ்நாள் முழுவதும் ஒருவர் ஒரே வேலையில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
திறமை, மேம்பாடு, மறுசீரமைப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பதைப் புதிய கல்விக் கொள்கை உறுதி செய்யும். தேசத்தின் திறமையைத் தக்கவைத்துக் கொள்ள புதிய கல்விக் கொள்கை உதவும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கல்வித் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே, புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரிரங்கன், பல்கலைகழகத் துணை வேந்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT