Published : 07 Aug 2020 10:34 AM
Last Updated : 07 Aug 2020 10:34 AM
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் இரா.மேகலா. இயல்பாகவே மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட இவர், புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், எழுத்தாளரும் கூட.
தற்போது கரோனா பொது முடக்கத்தால் வீட்டிலேயே மாண வர்கள் முடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் கற்பிக்கின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் மன ரீதியாக கல்விப் பாதையிலிருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காக, கிராமப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வீடு தேடிச் சென்று பாடங்களை கற்பித்து வருகிறார்.
இதுகுறித்து ஆசிரியை இரா.மேகலா, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
கரோனா பொது முடக்க கால கட்டத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப் பில் கவனம் செலுத்த, அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இச்சூழலில், என்னிடம் படிக்கும் மாணவர்களின் நலன் குறித்து விசாரிப்பதற்காக திருநள்ளாறு, அத்திப்படுகை, பூமங்களம், பிள்ளைத்தெருவாசல், மேலக் காசாக்குடி போன்ற கிராமங்களுக்கு அவ்வப்போது சென்று மாணவர்கள், பெற்றோர்களுடன் உரையாடினேன். அப்போது, மாணவர்கள் நோட்டுப் புத்தகங் களை எடுத்து சாதாரணமாக எழுதவோ, படிக்கவோ செய்வதில்லை என்றும், எப்போதும் செல்போனில் கேம் விளையாடி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாற்றமடைந்து வருவதையும் உணர்ந்துகொண்டேன். அளவுக்கு அதிகமாக விடுமுறையை அனுபவித்து திகட்டி விட்டதாலோ என்னவோ எப்போதுமே விடுமுறையை விரும்பும் மாணவர்கள், பள்ளிகள் திறக்கப்பட வேண்டும், படிக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.
எனவே, பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், திருநள்ளாறு அருகே உள்ள அத்திப்படுகை கிராமப் பகுதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் கடந்த 10 நாட்களாக பாடங்களை கற்பித்து வருகிறேன்.
பாடத்திட்டம் என்ற நிலையில் இல்லாமல் கையெழுத்துப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அடிப்படை ஆங்கில இலக்கணம், தமிழ், ஆங்கிலப் பக்கங்களை வாசிக்கப் பழகுதல், கணித வாய்ப்பாடுகளை நினைவுகூர்தல் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறேன். பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு வராத மணவர்கள் கூட தற்போது முழு ஆர்வத்துடன் திண்ணையில் பாடம் கற்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT