Published : 05 Aug 2020 04:14 PM
Last Updated : 05 Aug 2020 04:14 PM
சிவில் சர்வீஸ் தேர்வில் 36-வது இடம் பெற்ற ஆர்.சரண்யாவுக்கு புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டுக்கான மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் நேற்று (ஆக.4) வெளியிடப்பட்டன.
இதில் காரைக்கால் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ.ராமச்சந்திரன்- புனிதா தம்பதியர் மகள் ஆர்.சரண்யா, தனது 26-வது வயதில் 3-வது முயற்சியில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 36-வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை முடித்தார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.5) நடைபெற்ற நிகழ்வில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோரை ஆர்.சரண்யா தனது குடும்பத்தாருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சரண்யாவை கவுரவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் இந்த வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக சரண்யாவுக்கும், அவருக்கு இத்தகைய சூழலை அமைத்துக் கொடுத்த அவரது பெற்றோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீப காலங்களில் அரசுப் பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, அனைத்துத் தமிழ்ச் சமூகமும் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும் நேரத்தில், காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேலநிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை முடித்துவிட்டு, பின்னர் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் 4 ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டு, இத்தேர்வை சரண்யா எழுதியுள்ளார்.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து வந்துள்ளது உறுதியாகிறது.
இதை உணர்ந்து வரும் காலங்களில் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை, கல்லூரிகளை நாடி வர வேண்டும். கல்வித்துறைக்காக அரசு மிக அதிகமாக செலவிட்டு வருகிறது. இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டாத காரணத்தால் அதனைத் தொடர்ந்து சரிவர நடத்த இயலவில்லை. ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அரசே நிதியுதவி செய்து சென்னை போன்ற பெருநகரங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அது விரைவில் செயல்படுத்தப்படும்" என்றார்.
துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT