Published : 04 Aug 2020 08:06 PM
Last Updated : 04 Aug 2020 08:06 PM
புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்கவில்லை எனவும் மறு சீராய்வுக்கு உட்படுத்தக் கோரியும் மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கடிதம் எழுதுமாறு முதல்வர், கல்வியமைச்சருக்கு முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும் எம்எல்ஏவுமான லட்சுமி நாராயணன் மனு தந்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கல்வியமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோருக்கு புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்ற செயலர் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் அளித்துள்ள மனு விவரம்:
''புதிய தேசிய கல்விக் கொள்கை நல்விளைவுகளை ஏற்படுத்தாது. தொலைநோக்கு என்று கூறப்படும் இந்தக் கொள்கையின் உள்நோக்கமும், உள்ளடக்கமும் வேறு விதமாக உள்ளது.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சாரமான, அடிப்படைத் தத்துவங்களான சம வாய்ப்பு என்பதற்கும் சமமான கல்வி என்பதற்கும், தரமான கல்வி தருவது என்பதற்கும், இலவசக் கல்வி தருவது என்பதற்கும் வாய்ப்பு தராத, இல்லாத கொள்கையாக இது இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பதும் ஆரம்பக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் கட்டாயம் என்ற அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளும், அனைவருக்கும் இலவசக் கல்வி தருவது கட்டாயம் என அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துவதும், இந்த தேசிய கல்விக் கொள்கையால் காணாமல் போய்விடும் என்பது அச்சமாக உள்ளது.
கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு மாறாக பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்தால் பள்ளிக்கே வராத சூழ்நிலையை ஏற்படுத்துவது எப்படிச் சிறந்த கல்விக் கொள்கையாக இருக்க முடியும்?
பொதுத்தேர்வுகள் மூலம் 3-வது, 5-வது, 8-வது, 10-வது, 11-வது, 12-வது வகுப்புகள் என 6 நிலைகளிலும் பொதுத்தேர்வை வைத்து மாணவர்கள் தோல்வி அடைய நேர்ந்தால் 2030-க்குள் 100% பள்ளிச் சேர்க்கை எப்படிச் சாத்தியமாகும்? மாணவர்கள் தேர்வு பயத்திலேயே வாழ்ந்து முடிப்பார்கள். அதிலும் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பருவமுறை பொதுத் தேர்வு என்பதால் அவர்களால் மூன்று மாதங்கள்கூட பாடங்களைக் கற்க இயலாத சூழ்நிலை உருவாகும். பருவத்தேர்வு தயாரிப்பில் ஈடுபட்டால் பாடங்களை ஆழ்ந்து படிப்பதும், புரிந்து படிப்பதும் கேள்விக் குறியாகும்.
ஆரம்பப் பள்ளிகளில் சமூகப் பணியாளர்கள், ஆலோசகர்கள், மன நலத்தைப் பேணுகிறோம் என்ற பெயரில் நுழைவது என்பது அனாவசியமான அரசியல் கலப்புப் பள்ளிகளில் நுழையும். இதனால் பள்ளிக் கற்றல் சூழ்நிலை கெடும். இந்தித் திணிப்பு என்ற விஷயத்தால் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தவே இக்கொள்கை முன் மொழியப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கொடுத்த 1000 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு துறையின் தலைவர்கூடப் புதுச்சேரியைச் சார்ந்தவர் இல்லை. பேராசிரியர் இடங்களுக்குக் கூட உள்ளூர்க்காரர்கள் பணி அமர்த்தப்படுவதில்லை. இனி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்துக் கல்லூரிக்கும் தன்னாட்சி பெற்ற, பட்டம் தரும் கல்லூரிகளாக மாற்றப்பட்டால் புதுச்சேரி அரசின் கீழ் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் யாரை வேண்டுமானாலும் மத்திய அரசு கல்லூரி முதல்வராகவோ, துணைவேந்தராகவோ நியமிக்க முடியும்.
நியாயம் கேட்க எதிர்த்து வழக்குப் போட முடியாது. மாறாகப் பிரதமர் தலைமையில் அமைக்கப்பட உள்ள தேசிய கல்வி ஆணையத்தில் முறையிட வேண்டும். அனைத்து உயர்கல்வி சேர்க்கைகளும், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுத்தான் உயர்கல்வியில், கல்லூரியில் சேர முடியும் என்றால் அது ஏழை மாணவர் சமுதாயத்திற்கு, கிராமப்புற மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
அனைத்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும். தரம், திறமை என்ற பெயரில் பேராசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவும் வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்வியில் சேரத் தகுதித்தேர்வு வைப்பதால் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தி பெரும் பணம் ஈட்டும் தொழிலாக, இதற்கும் பயிற்சி நிறுவனங்கள் காளான் போல ஆரம்பிக்கப்படும்.
மேல்நிலைப் பள்ளிப் படிப்பும் முக்கியத்துவம் பெறாது. மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலே போதும் என்ற நிலைக்கு வந்து விடுவர். படிப்பில் முழு முயற்சியும் கடின உழைப்பும், உயர் மதிப்பெண் பெற உந்துதலும் இல்லாமலேயே போகும் அபாயம் உள்ளது. ஒட்டுமொத்தமாக பள்ளி இறுதிப் படிப்பும், கல்லூரிப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி என்றும் இரண்டிலும் முழு அர்ப்பணிப்பின்றி வீணாகும் அபாயம் உள்ளது. தனியார் மயமும், அதிகாரக் குவிப்பும்தான் இந்த தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய முடிவாகத் தெரிகிறது.
இக்கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் வீண் சச்சரவுகள், எதிர் விளைவுகள்தான் வரும். பிரதமர் சொன்னது போல் வேலைவாய்ப்பிற்காக அல்ல வேலை கொடுக்கும் நிர்வாகம் என்பதெல்லாம் கானல் நீர். இந்த தேசிய கல்விக் கொள்கை சீராய்வு செய்யப்படுதலே நாட்டிற்கும் நல்லது, மாணவர்களுக்கும் நல்லது. சமுதாயத்திற்கும் நல்லது. இது சம்பந்தமாக புதுச்சேரி சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும். முதலில் இக்கருத்துகளின் அடிப்படையில் புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசுக்கு இக்கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் கொள்கையை மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கடிதம் எழுத வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT