Published : 03 Aug 2020 01:35 PM
Last Updated : 03 Aug 2020 01:35 PM
சிறு வயது வறுமை, இரண்டாம் உலகப் போர், கரோனா போன்ற பெருந்தொற்று நோய்கள் ஆகியவற்றைக் கடந்து இத்தாலி முதியவர் பட்டம் பெற்றது பலரின் பாராட்டுகளையும் அள்ளித் தந்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த 96 வயது முதியவர் கியூசெப் பட்டர்னோ. சிறுவயது முதலே வறுமை, போர் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்ததால் கல்லூரிப் படிப்பை அவரால் தொடர முடியாமல் போனது. ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தபிறகு மீண்டும் படிக்க விரும்பினார் பட்டர்னோ. ஆனால், தொடர் வேலைப் பளுவால் அவரால் படிக்க முடியவில்லை.
இதற்கிடையே 2017-ல் பலேர்மோ பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தத்துவவியல் பாடத்தில் படிக்கச் சேர்ந்தார் பட்டர்னோ. இதுகுறித்துப் பேசும் அவர், ''நான் மற்ற எல்லோரையும் போல சராசரி நபர்தான். என் வயதுக்கு எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். ஆனால், கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. ஒரு நாள், இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்று தோன்றியது.
3 ஆண்டுப் பட்டத்தைப் பெற இது தாமதமான முயற்சி என்று எனக்கும் தெரிந்திருந்தது. எனினும் என்னால் முடியுமா என்று பார்த்துவிட முடிவு செய்தேன். இப்போது பட்டம் பெற்றுவிட்டேன். அறிவு என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு புதையல்'' என்றார் பட்டர்னோ.
இதற்கிடையே பட்டர்னோ பட்டம் பெற்றதற்கு, அவரின் குடும்பத்தினர், ஆசிரியர்கள், கிட்டத்தட்ட 70 வயதுக்கும் குறைவான சக மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இணையத்திலும் இவர் தொடர்பான படங்கள் வைரலாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT