Published : 03 Aug 2020 12:42 PM
Last Updated : 03 Aug 2020 12:42 PM
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகம் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதியிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்த நிலையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போயுள்ளது.
இதற்கிடையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆன்லைன் கல்வியைப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. இன்று முதல் தனியார் தொலைக்காட்சிகளிலும் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
இதனால் பாடப்புத்தகங்கள் இருந்தால் மாணவர்கள் எளிதில் படிக்க முடியும் என்று கல்வித்துறை கருதியது. இதனை முன்னிட்டு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் விலையில்லாப் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் 2 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசப் பாடநூல் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் பணி தொடங்கியது.
இவற்றை வாங்க வரும் மாணவர்களும் பெற்றோரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், 1 மணி நேரத்தில் 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முடிந்த பிறகு, அவர்களைப் பள்ளிக்கு அழைத்து பாடநூல்கள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT