Published : 03 Aug 2020 07:16 AM
Last Updated : 03 Aug 2020 07:16 AM
மரைன் இன்ஜினீயரிங், நாட்டிகல் சயின்ஸ்படிக்கும் மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் கூறினர்.
பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் நாளிதழ்’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து ஒவ்வொரு நாளும் அந்தந்த துறையை சேர்ந்த வல்லுநர்கள் உரையாற்றி வருகின்றனர். கடந்த 1-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கடல்சார் பொறியியல் (மரைன் இன்ஜினீயரிங்), கடல்சார் தொழில்நுட்பம் (ஓஷன் டெக்னாலஜி) படிப்புகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து துறை வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:
கல்வி ஆலோசகர் டாக்டர் கே.மாறன்: தனிநபர் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் கல்விக்கு முக்கிய இடம் உண்டு. பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக திகழ்வது கல்விதான். கல்வி மூலமாக வாழ்க்கையில், குடும்பத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இந்தியாவில் உயர்கல்வி செல்வோர் எண்ணிக்கையை தற்போதைய 26 சதவீதத்தில் இருந்து வரும் 2035-ம் ஆண்டில் 50 சதவீதமாக உயர்த்தும் நோக்கிலேயே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
உலக அளவில் மூன்றில் 2 பங்குவர்த்தகம் கடல்வழியாகவே நடைபெறுகிறது. கடல் வணிகத்தில் மரைன் இன்ஜினீயரிங், ஓஷன் டெக்னாலஜி படிப்புகள் மிக முக்கியமானவை. மரைன் இன்ஜினீயரிங் துறையில் சுமார்12 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன.இது ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவீதம்அதிகரிக்கிறது. அதிக வேலை வாய்ப்புகள் நிறைந்த, நல்ல சம்பளம் வழங்கக்கூடிய இத்துறையை மாணவர்கள் தாராளமாக தேர்வுசெய்து படிக்கலாம்.
சென்னை ‘அமெட்’ கடல்சார் பல்கலைக்கழகத்தின் நாட்டிகல் சயின்ஸ் துறை டீன் கேப்டன் கே.கார்த்திக்: உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் கப்பல் போக்குவரத்து வழியாகவே நடக்கிறது. மரைன் இன்ஜினீயரிங் துறையில் ‘டெக்’, ‘இன்ஜின்’ என 2 முக்கிய துறைகள் உள்ளன. டெக் துறையில் டெக்கேடட், 3-வது, 2-வது நிலை அதிகாரிகள், தலைமை அதிகாரி இறுதியாக கேப்டன் என பல்வேறு நிலைகள் உள்ளன.
பிளஸ் 2 முடித்தவர்கள் நாட்டிகல் சயின்ஸில் பி.எஸ்சி. அல்லது டிப்ளமா ஆகிய 3 ஆண்டு படிப்புகளை முடித்துவிட்டு டெக் துறை பணியில் சேரலாம். பி.எஸ்சி.யில் சேர கணிதம், இயற்பியல், வேதியியலில் 60 சதவீத மதிப்பெண், ஆங்கிலத்தில் 55 சதவீத மதிப்பெண் தேவை. நிறம் பிரித்தறியும் குறைபாடு இருக்கக் கூடாது. நல்ல உடல்நலம் அவசியம். டிப்ளமா படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியலில் 55 சதவீத மதிப்பெண் போதும். 3 ஆண்டுகால படிப்பில், முதல் ஓராண்டு கல்லூரி படிப்பு, அடுத்த ஒன்றரை ஆண்டுகள் கப்பலில் படிப்பு, இறுதி 6 மாதம் மீண்டும் கல்லூரியில் படிப்பு என இது அமைந்திருக்கும். ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.
இன்ஜின் துறையை பொருத்தவரை, ஜூனியர் அல்லது இன்ஜின் கேடட், 5-வது, 4-வது, 3-வது, 2-வது இன்ஜினீயர்கள், இறுதியாக தலைமை இன்ஜினீயர் என பல்வேறு பதவிகள் உள்ளன. உரிய அனுபவத்துடன், அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்து பதவி உயர்வு பெறலாம். டெக் துறை போல இதிலும் 10 ஆண்டுகளில் தலைமைப் பதவியான தலைமை இன்ஜினீயர் பதவியை அடையலாம். பி.இ. மரைன் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் இன்ஜின் துறையில் சேரலாம். பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். முதலாண்டு பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர்கள் பி.இ. மரைன் இன்ஜினீயரிங் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம்.
சென்னை வி.ஷிப்ஸ் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.மணிகண்டன்: கப்பல் போக்குவரத்து துறையில் அதிகாரிகள், சிப்பந்திகள் என பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் இத்துறையில் சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைன், ரஷ்யா, இந்தியாவை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் மட்டும் கப்பல்களில் பணியாற்ற 44 ஆயிரம் சிப்பந்திகள் தேவை. தகவல்தொடர்பு திறன், பல்வேறு கலாச்சார சூழல்களில் பணியாற்றும் திறன், குழு உணர்வு போன்ற திறமைகள் இத்துறைக்கு அடிப்படை தேவைகள். மரைன் இன்ஜினீயரிங், நாட்டிகல் சயின்ஸ் மட்டுமின்றி நேவல் ஆர்க்கிடெக்சர், ஷிப் ரிப்பேரிங், எம்பிஏ துறைமுக மேலாண்மை, எம்பிஏ கப்பல் மேலாண்மை என வெவ்வேறு படிப்புகள் உள்ளன.
உலகம் முழுவதும் 70 ஆயிரம் கப்பல்கள் உள்ளன. இவற்றில் சுமார் 15 லட்சம் அதிகாரிகள், இன்ஜினீயர்கள், சிப்பந்திகள் பணியாற்றுகின்றனர். தகவல்தொடர்பு திறன், ஆராயும் திறன் காரணமாக இந்தியப் பணியாளர்களை உலக நாடுகள் அதிகம் விரும்புகின்றன. இந்தியாவில் மட்டும் 15 லட்சம் சிப்பந்திகள் தேவை. ஆனால், 2 லட்சம் பேர் மட்டுமே இருக்கின்றனர். தவிர, ‘சாகர் மாலா’ திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி முதலீட்டில் உள்நாட்டு நீர் போக்குவரத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. எனவே, வரும் காலங்களில் வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
பணியாளர் பற்றாக்குறை நிலவுவதால் இத்துறையில் போட்டி குறைவு.படித்து முடித்தவுடன் நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும். டெக் கேடட்நிலையிலோ, கேடட் இன்ஜினீயர் நிலையிலோ பணியில் நுழைபவர்களில் 90 சதவீதம் பேர் தலைமை பதவியை அடைந்துவிடுகின்றனர். பணியில் சேர்ந்த 10 ஆண்டுகளில், இளம் வயதிலேயே கேப்டன், தலைமை இன்ஜினீயர் என தலைமை பொறுப்பு வகிப்பது ஒரு வரப்பிரசாதம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர், மரைன் இன்ஜினீயரிங், ஓஷன் டெக்னாலஜி படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர் கேட்ட கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதில் அளித்தனர். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது.
இணையத்தில் இதுவரையிலான நிகழ்வுகள்
உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி கடந்த ஜூலை 24-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறை வல்லுநர்கள் பங்கேற்று, அத்துறை தொடர்பான படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து உரையாற்றுகின்றனர்.
இதுவரை நடந்த நிகழ்வுகளில் பங்கேற்கத் தவறியவர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் முழு நிகழ்வுகளையும் காணலாம்.
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல்: https://bit.ly/3gn76ui
செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன்: https://bit.ly/2PgDCm3
எம்பெடட் சிஸ்டம், இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடி) சைபர் செக்யூரிட்டி: https://bit.ly/315q56m
சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர்: https://bit.ly/39RYY2O
கலை, அறிவியல் படிப்புகள்: https://bit.ly/3fn1AGK
மரைன் இன்ஜினீயரிங், ஓஷன் டெக்னாலஜி: https://bit.ly/2D2R5vv
‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT