Last Updated : 29 Jul, 2020 05:21 PM

 

Published : 29 Jul 2020 05:21 PM
Last Updated : 29 Jul 2020 05:21 PM

பொது முடக்கத்திலும் வீடு வீடாகச் சென்று 10-ம் வகுப்பு மாணவர்களைத் தயார்படுத்தும் தமிழாசிரியை

10-ம் வகுப்பு மாணவர்களைத் தயார்படுத்தும் தமிழாசிரியை.

கடலூர்

பொது முடக்கக் காலத்திலும் 10-ம் வகுப்பு மாணவர்களை வீடு வீடாகச் சென்று கல்வி கற்பதற்குத் தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியை மகாலட்சுமி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 முதல் 1,000 மாணவர்கள் வரை பயில்கின்றனர். கரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகளும் மூடியே உள்ளதால், அடுத்த வகுப்புக்குத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எப்போது பள்ளி திறக்கும் எனக் காத்திருக்கின்றனர். எனவே, கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பாடங்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும் வகையில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும் சூழல் உருவாகியுள்ளதால், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு தமிழாசிரியை மகாலட்சுமி என்பவர் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, பள்ளி மூடப்பட்டிருக்கும் சூழலில் வீட்டில் அவர்கள் எவ்வாறு பயில்கின்றனர் என்பதைப் பெற்றோர்களிடம் கேட்டறிவதோடு, அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளவேண்டும் எனவும், வீட்டு வேலைகளில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளித்து, பொதுத் தேர்வை எதிர்கொள்ளத் துணையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்.

மேலும், வாட்ஸ் அப் குழுவையும் ஏற்படுத்தி அதன் மூலமும் இலக்கணக் குறிப்புகளை வழங்குவதோடு, ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள், அருகிலிருக்கும் மற்ற மாணவர்களோடு பகிர்ந்து படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்.

இந்தத் தகவலறிந்து, ஆசிரியை மகாலட்சுமியிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், "கிராமப்புறத்தில் மாணவர்களின் சூழலை நன்கு அறிவேன். அவர்களை ஆரம்பத்திலிருந்தே அரவணைத்துச் சென்றால் அவர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவர். ஆனால், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் தேர்வுக் காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர்.

எனவே, அவர்களையும், குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து நிலையை விளக்கிக் கூறினால், வீட்டில் உள்ளவர்களும், மாணவர்களின் சூழலைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவுவர். அதனால் கடந்த 10 தினங்களாக நாளொன்றுக்கு 5 மாணவர்கள் எனக் கணக்கிட்டு அவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து உரையாடி, எவ்வாறு படிக்க வேண்டும் என்பதோடு, வாட்ஸ் அப் குழுவில் பகிரும் தகவல்களைப் புரிந்து படிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

பெற்றோர்களிடம் மாணவர்கள் படிக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்பதோடு, வீட்டு வேலைச் சுமைகளை மாணவர்கள் மீது திணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளேன்.

பொதுத்தேர்வின் முடிவுகள் வெளிவரும்போது கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் இருப்பது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எனவேதான் மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்" என்றார்.

நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறும்போது, "ஆசிரியை அவ்வப்போது போனில் பேசுவார். நேற்று எங்கள் வீட்டுக்கு வந்து எனது பாட்டியிடம் பேசிவிட்டுச் சென்றார். எனது சகோதரனிடம் இருக்கும் ஸ்மார்ட்போனை எனக்குக் கொடுத்து உதவும்படி கேட்டுக் கொண்டார்" என்றார்.

அதேபோன்று, மாணவர் ஒருவர் கூறுகையில், "டீச்சர் வந்தாங்க, எங்க அப்பா, அம்மாகிட்ட பேசி படிக்கறத கவனிச்சுக்க சொன்னதோடு, ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுங்கன்னு சொன்னாங்க" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x