Published : 28 Jul 2020 03:35 PM
Last Updated : 28 Jul 2020 03:35 PM

தனிமைப்படுத்தப்பட்ட தனித் தேர்வர்கள்; அரசின் காதுகளுக்கு அவலக் குரல் கேட்குமா?

உலக மக்கள் கரோனாத் தொற்றால் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த சூழலில் கரோனாவுக்கு இணையாக மாணவர்கள் மத்தியிலும் கலக்கத்தை உண்டாக்கியது பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு.

நடக்குமா? நடக்காதா? நடக்கவில்லை என்றால் எதிர்காலம் என்னாவது? மதிப்பெண் எப்படி அளிக்கப்படும் என்ற குழப்பங்களுக்கு, பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்தது. முந்தைய தேர்வு மதிப்பெண்களின்படி 80%, வருகைப் பதிவேட்டின்படி 20% என மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்து, முடிவுகளும் வெளியாகின. மாணவர்களும் பதினொன்றாம் வகுப்பை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனாலும், தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10,742 மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதத் தனியாகப் பதிவுசெய்துவிட்டு, தமிழக அரசால் எந்த தீர்வும் சொல்லப்படாமல், தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் தனித்தேர்வர்கள்.

யார் இவர்கள்?
பொதுவாகவே தனித்தேர்வர்களை, சமூகம் மாணவர்களாகவே அங்கீகரிப்பதில்லை. காரணம் தனித்தேர்வர்கள் என்றால் சரியாகப் படிக்காதவர்கள், பள்ளியை விட்டு நீக்கப்பட்டவர்கள் என்ற பார்வை சமூகத்திடம் உள்ளது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல. பெரும்பான்மையான தனித்தேர்வர்கள் சிறுவயதிலேயே குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைக் கைவிட்டு, வேலைக்கு சென்றவர்களாக உள்ளனர். பின்னாட்களில் கல்வியின் அவசியத்தைப் புரிந்துக்கொண்டோ அல்லது தேவையின் அடிப்படையிலோ, பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக இறுதித் தேர்வு எழுதும் வகையில் தனித்தேர்வர்களாகப் பதிந்துக்கொண்டு தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.

அவர்களைத்தான் தமிழக அரசின் தேர்வு முடிவு அறிவிப்பு, கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அரசின் அறிவிப்பில் உள்ள மதிப்பெண் வழங்கும் வழிமுறைதான். தனித்தேர்வர்கள் பள்ளிக்குச் சென்று காலாண்டு, அரையாண்டு போன்ற பருவத்தேர்வு எழுதுபவர்கள் அல்ல. அவர்களுக்கான வருகைப் பதிவேடும் கிடையாது. இந்த சூழலில் எப்படி இந்தத் தனித்தேர்வர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறப் போகிறார்கள் என்ற தெளிவான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை.

பொதுவாகத் தனித்தேர்வர்கள் பலரும் வயது மூப்படைந்தவர்கள். இந்த நிலையில் ஓராண்டு கடந்துபோவது என்பது, அவர்களைப் பெரும் துயரில் ஆழ்த்தும். இவர்கள் மட்டுமின்றி கடந்த தேர்வில் தவறிய 23 ஆயிரத்து 581 மாணவர்களும் தேர்வு எழுதப் பதிவுசெய்துள்ளார்கள். அவர்களின் நிலையும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தனித்தேர்வர்களின் தவிப்பு
எலக்ட்ரீஷியன் வேலை செய்து கொண்டிருக்கும் தனித்தேர்வர் ஒருவர், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வைத் தவற விட்டிருந்தார். இப்போது தனித்தேர்வராகப் பதிவுசெய்து காத்திருந்தார். ஆனால் கரோனாவால் தேர்வு நடைபெறாது என்ற அரசின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் , "ஒன்று எங்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும், இல்லை கரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தேர்வு நடத்த வேண்டும்" என வேதனையோடு கூறுகிறார்.

ஒரு பாடத்தில் கடந்த ஆண்டு தவறிய மாணவி ஒருவர், பதினொன்றாம் வகுப்புக்கு முன்னேற முடியவில்லை. இந்தத் தேர்வை எதிர்நோக்கிக் காத்திருந்தார். அரசின் அறிவிப்பால் தற்போது அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்த ஆண்டும் மேற்படிப்புக்குப் போகவில்லை என்றால், தன்னுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவிக்கிறார்.

இப்படி மாநிலம் முழுவதும் பதிவுசெய்துள்ள தனித்தேர்வர்கள் பலருடைய தலை மீதும் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டபோது, தேர்வு ரத்து செய்யப்படுகிறது, அனைவரும் தேர்ச்சி பெறுகிறார்கள் என அறிவித்தார். தேர்வு நடந்திருந்தால் அனைத்து மாணவர்களும் பாரபட்சமின்றித் தேர்வு எழுதியிருப்பார்கள். இந்தப் பின்னணியில் தேர்வு ரத்து என அரசு அறிவிக்கிறது என்றால், அது அனைவருக்கும் பொருந்துவதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், முடிவு அவ்வாறு இல்லை.

தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் பயிலும் அதே பாடநூலைப் பயில்பவர்கள். விடைத்தாள் மதிப்பீடும் இரு வகை மாணவர்களுக்கும் ஒன்றுபோல்தான் இருந்திருக்கும். இவ்வாறு எல்லா வகையிலும் சரிசமமாகப் பள்ளி மாணவர்களோடு போட்டியிடும் தனித்தேர்வர்களை, தேர்வு முடிவுகள் குறித்து அறிவிக்கையில் மட்டும் புறக்கணிப்பது நியாயமற்றது. இந்தத் தனித்தேர்வர்களில் அனைவரும் வயதைக் கடந்தவர்கள் அல்ல.

பல காரணங்களுக்காக மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் முன் தேர்வுகளில் தோல்வியைத் தழுவி மீண்டும் விண்ணப்பித்தவர்கள் எனப் பலர் அடங்குவார்கள். இவர்களுக்கான போட்டி ஒன்றுபோல் இருக்கையில், தேர்வு முடிவுகளும் ஒன்றாக அறிவிக்கப்பட வேண்டும்" என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தீர்வு என்ன?

• தனித்தேர்வர்கள், அட்டெம்ட் எழுதும் மாணவர்களின் பயத்தைப் போக்க முறையான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

• மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல், எல்லோருக்கும் தேர்ச்சி என்று பொதுவாகச் சான்றிதழ் வழங்கலாம்.

• அவர்களுக்கான இடங்களை அரசுப் பள்ளிகளில் ஒதுக்கலாம்.

• உயர்கல்விக்கு போகும்போது, அவர்களுக்குச் சிறப்பு சலுகை அளிக்கலாம்.

மேற்கண்டவற்றை அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கான தனித்தேர்வர்களின் வேண்டுகோள்.

பத்தாம் வகுப்பில் எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று அறிவித்த தமிழக அரசின் காதுகளில், தனித்தேர்வர்களின் அவலக் குரல் கேட்குமா?

சுபாஷ்- கட்டுரையாளர், தொடர்புக்கு: sram72451@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x