Published : 28 Jul 2020 07:26 AM
Last Updated : 28 Jul 2020 07:26 AM

கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மதிப்பெண் வழங்கும் வழிமுறைகள் அறிவிப்பு: உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு

சென்னை

கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் வழங்கும் வழிமுறைகள் குறித்து உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழும வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், நடப்பு பருவத்தின் அக மதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீதமதிப்பெண்களையும் கணக்கில்எடுத்து 100 சதவீத மதிப் பெண்களுக்கு கணக்கிடப்படும். இவ்வாறே முதன்மை மற்றும் மொழிப் பாடங்களுக்கு மதிப் பெண் அளிக்கப்படும்.

துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு 100 சதவீதம் அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும். செயல்முறை தேர்வுநடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மாணவர்கள் இதற்கு முந்தையபருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அத்தேர்வுகளைப் பின்னர் எழுதவேண்டும். தொலைதூரக் கல்வியைப் பொறுத்தவரை இதே நடைமுறையே பின்பற்றப்படும். தொலைதூரக் கல்வியில் அக மதிப்பீடு இல்லாத இடங்களில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்குபெற்று தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம். மேலும், கரோனா பரவலின் கடினமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கருணை முறையில் மதிப்பெண்கள் அளித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x