Last Updated : 27 Jul, 2020 07:33 AM

 

Published : 27 Jul 2020 07:33 AM
Last Updated : 27 Jul 2020 07:33 AM

கரோனா ஊரடங்கால் பெற்றோர் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மாணவர்களுக்கு முன்கூட்டியே கல்விக் கடன் வழங்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கல்வியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை

ஊரடங்கால் மக்களின் வாழ்வதாரம் முடங்கிய சூழலில் கல்விக் கடன் தொகையை மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கலை, அறிவியல், பொறியியல் உட்பட உயர்கல்வி
படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேநேரம், தற்போதைய கரோனா சூழலில் தொழில்கள் அனைத்தும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி கனவை நனவாக்க கல்விக்கடன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, கல்விக் கடன் திட்டத்தை பொருத்தவரை, மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகே கடன் தொகையை வங்கிகள் வழங்குகின்றன. இதனால், முதலாண்டு மட்டும் கட்டணத்தை மாணவர்கள் கல்லூரிகளில் செலுத்திவிட்டு, பிறகு வங்கியில்திரும்பப் பெறும் நடைமுறை உள்ளது. அதனால் வெளியே கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு மட்டும் விதிகளை தளர்த்தி மாணவர்களுக்கு முன்னரே கல்விக் கடன் தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும், கல்வியாளருமான ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், கல்லூரிகள் மாநில அரசின் கீழும் வருகின்றன. இந்த 2 அமைப்புகள் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் நீண்ட காலமாகவே கல்விக் கடன் திட்டத்தில் இந்த சிக்கல் தொடர்கிறது.

தற்போது கரோனா பேரிடரால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கலந்தாய்வில் கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை கடிதம் மாணவர்களுக்கு தரப்பட்டதும் வங்கிகள் கல்விக் கடன் தொகையை வழங்க
வேண்டும். அத்தாட்சி சான்றிதழ் (Bonafide Certificate) கேட்டு தாமதம் செய்யக் கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

கரோனா பாதிப்பால் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதனால் மாணவர்களுக்கு கல்விக் கடன் என்பது பெரும் சுமையாகிவிடக் கூடாது. எனவே, பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் தரப்படும் கல்வி உதவித் தொகையை மத்திய, மாநில
அரசுகள் உயர்த்தி வழங்க வேண்டும். அதற்கு குறைந்தபட்ச மதிப்பெண், வருமான உச்ச வரம்புபோன்ற வரையறைகளை
வகுத்து தகுதியான மாணவர்களை தேர்வு செய்து ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கு செலவிடுவதை அரசு
கள் செலவினமாக பார்க்காமல் முதலீடாக பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் எளிதில் கல்விக்கடன் பெற ஏதுவாக என்எஸ்டிஎல் நிறுவனம் சார்பில் www.vidyalakshmi.co.in என்ற இணைய
தளம் இயங்கி வருகிறது. மத்திய நிதியமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன் இது செயல்படுகிறது. மாணவர்கள் கல்விக் கடன் பெற இந்த இணையதளம் மூலம் தங்கள் பகுதியில் உள்ள ஏதேனும் 3 வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்ட விவரத்தையும் இணையதளம் மூலமாகவே அறியலாம். வங்கிகளுக்கு நேரடியாக செல்வதைவிட இணையவழியில் விண்ணப்பிப்பதே சிறந்தது. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதை வங்கி ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும். சரியான காரணமின்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அதற்கும் பதில் வராதபட்சத்தில் pgportal.gov.in என்ற இணையதளத்தில் பிரதமருக்கு புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே வட்டி மானியம் வழங்கப்படும். அதாவது பொறியியல் கல்லூரி
கள் நாக், என்பிஏ அங்கீகாரமும், மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரமும், சட்டக் கல்லூரிகள் பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்கும். ஆனால் வட்டி மானியம் கிடைக்காது.

ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன் பெறுபவர்கள் பிணை ஆவணம் சமர்ப்பிக்க தேவையில்லை. பெற்றோர் கையொப்பம் மட்டும் போதும். பிணை ஆவணம் சமர்ப்பித்தால் வட்டி மானியம் கிடைக்காது.’

படிப்பு முடிந்து ஓராண்டு வரை வட்டி மானியம் வழங்கப்படும். மாணவர்கள் வேலை கிடைத்த பிறகு தவணை முறையில் 15 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்தலாம். வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கடன் தொகை செலுத்து
வதை 3 முறை தள்ளிப்போடவும் வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x