Published : 18 Jul 2020 05:40 PM
Last Updated : 18 Jul 2020 05:40 PM
திருச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி தினசரி 12 மணி நேரம் கணினியில் அமர்ந்து 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் அனைத்தையும் வரிகூட விடாமல், வீடியோவாக்கி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவசமாக அனுப்பி வருகிறார். இதுதவிர்த்து வலைப்பூ ஒன்றில் அனைத்தையும் பதிவேற்றம் செய்து வருகிறார்.
ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் வீடியோ குறுந்தகடுகளாக மாற்றி தமிழ்நாடு முழுக்க ஆரம்பப் பள்ளிகளுக்கு வழங்கியவர் குருமூர்த்தி. புதியப் பாடத்திட்டத்தில் 1-ம் வகுப்பில் உள்ள அனைத்துப் பாடங்களையும் வீடியோ பாடங்களாக மாற்றியுள்ளார்.
கரோனா ஊரடங்கு நேரத்தில் முடங்கி விடாமல் என்ன செய்யலாம் என்று யோசித்தவர், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட வரிகளுக்கு ஏற்றவாறு, படங்களைத் தொகுத்து வீடியோவாக்கியுள்ளார்.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையதளத்திடம் பேசிய அவர், ''புத்தகத்தின் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள ஒவ்வொரு வரியையும் வீடியோவாகத் தொகுத்துள்ளேன். ஒவ்வொரு பாடத்தையும் 2 அல்லது 3 பாகங்களாகப் பிரித்து உருவாக்கியுள்ளேன். ஒரு பாடத்தை வீடியோவாக உருவாக்க சுமார் 50 மணி நேரம் ஆனது. பாடத்துகெனப் பொதுவாகக் காணொலி தயாரித்தால் எளிதாக முடித்துவிடலாம். ஆனால், இதில் ஒவ்வொரு வரிக்கும் வீடியோ இருக்கும்.
பள்ளி நாட்களில் பணியை முழுவீச்சில் செய்யமுடியவில்லை. அதனால் இந்த ஊரடங்கு நாட்களில் தினமும் 12 மணிநேரம் வேலை செய்து இப்பணியை முடித்தேன். தொடர்ந்து அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் செய்ய உள்ளேன்.
நாளடைவில் கண் வலி அதிகமாகிவிட்டது. கண் மருத்துவரிடம் சென்று பார்த்து, வேலை பார்க்கும் நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்திருக்கிறேன். கணிப்பொறியில் வேலை செய்யத் தனிக் கண்ணாடி வாங்கிப் பணியாற்றி வருகிறேன். வீட்டினர் ஒத்துழைப்பால் இது சாத்தியமாகி உள்ளது.
10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வீடியோக்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். வீடியோக்களை என்னுடைய 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனுப்பிவிட்டேன். ஆசிரிய நண்பர்களுக்குப் பகிர தனி வாட்ஸ் அப் குழுவை ஆரம்பித்துள்ளேன். அதேபோல www.guruedits.blogspot.com என்ற வலைப்பூவிலும் பதிவேற்றி வருகிறேன்.
வீடியோக்களை உருவாக்குவதாலேயே பள்ளியில் அதைக்கொண்டு மட்டும் கற்பிப்பதில்லை. மாணவர்கள் சற்றே சோர்வாக உணரும் மதியம் 1.30 முதல் 2 மணி வரை காட்டி விளக்கம் கொடுப்பேன். ஒவ்வொரு பாடத்துக்கான வீடியோவும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஒளிபரப்பாகும். அதை ஒருமுறை காட்டி விளக்கிவிட்டு புத்தகச் செயல்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவோம்'' என்கிறார் ஆசிரியர் குருமூர்த்தி.
இதற்கிடையில் 2 முதல் 5-ம் வகுப்பு வரையான ஆங்கிலப் பாடங்களில் உள்ள கடினமான வார்த்தைகளைத் தொகுத்து அவற்றுக்கான அர்த்தங்களைக் குறிப்பிட்ட ஆசிரியர் குருமூர்த்தி, அதனுடன் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளையும் சேர்த்து சிறு புத்தகமாக்கி தனது மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறார்.
அதேபோல ஊரடங்கைப் பயனுள்ள வகையில் கழிக்க, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதைப் புத்தகங்கள், ஓவியப் புத்தகங்கள், வண்ணப் பென்சில்கள் ஆகியவற்றையும் சொந்தச் செலவில் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
எந்தத் தொழில்நுட்பமும் ஆசிரியரின் நேரடிக் கற்பித்தலுக்கு ஈடாகாது என்று சொல்லும் ஆசிரியர் குருமூர்த்தி, ஊரடங்கு நேரத்தில் மாணவர்களின் குறைந்தபட்சக் கற்றலுக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில் வீடியோ பாடங்களைத் தயாரித்துள்ளதாகக் கூறுகிறார்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT