Last Updated : 16 Jul, 2020 06:09 PM

 

Published : 16 Jul 2020 06:09 PM
Last Updated : 16 Jul 2020 06:09 PM

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் 6-வது இடத்துக்கு முன்னேறிய திருச்சி மாவட்டம்; அரசுப் பள்ளிகளின் தேர்ச்சியே காரணம்; ஆட்சியர் பெருமிதம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு

திருச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நிகழாண்டு 95.94 சதவீதத் தேர்ச்சியுடன் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 6-வது இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு, அரசுப் பள்ளிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதே காரணம் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.

ஒட்டுமொத்தப் பள்ளிகள் அடிப்படையில் கடந்த ஆண்டில் 93.56 சதவீதத் தேர்ச்சியுடன் 13-வது இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம், இந்த ஆண்டு 95.94 சதவீதத் தேர்ச்சியுடன் 7 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பெற்றுள்ளது.

அதேபோல், அரசுப் பள்ளிகள் அளவில் மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டு 88.24 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 4.51 சதவீதம் கூடுதல் தேர்ச்சியுடன் 92.75 சதவீதம் பெற்றுள்ளது.

மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வகையான 250 பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 822 மாணவர்கள், 17 ஆயிரத்து 226 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 48 பேர் தேர்வெழுதியதில், 12 ஆயிரத்து 991 மாணவர்கள், 16 ஆயிரத்து 796 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, மாணவர்கள் 93.99 சதவீதம் பேரும், மாணவிகள் 97.50 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பல்வேறு வகை பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகை பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் விவரம் (பள்ளிகள், தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டு- நிகழாண்டு, வித்தியாசம் என்ற அடிப்படையில்):

அரசுப் பள்ளிகள்- 88.60- 92.92- 4.32 சதவீதம்.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்- 84.83- 90.40- 5.57 சதவீதம்.

பழங்குடியினர் நலப் பள்ளிகள்- 75- 94.44- 19.44 சதவீதம்.

அரசு உதவி பெறும் பள்ளிகள்- 94.84- 96.20- 1.36 சதவீதம்.

சரிவு

அதேவேளையில், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டில் 99.41 சதவீதமாக இருந்து, நிகழாண்டு 1.47 சதவீதம் சரிந்து 97.94 சதவீதமாக உள்ளது.

முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 88 அரசுப் பள்ளிகளில் 14 பள்ளிகளும், 15 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 3 பள்ளிகளும், 49 நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11, 24 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11, 74 மெட்ரிகுலேசன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 43 பள்ளிகளும் முழு தேர்ச்சி பெற்றுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறும்போது, "பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு தேர்ச்சியில் மாநில அளவில் 13-வது இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம், நிகழாண்டு 6-வது இடத்தைப் பெறுவதற்கு, அரசுப் பள்ளிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றதே காரணம். அதாவது, கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு அரசுப் பள்ளிகள் 4.51 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளன. இந்தத் தேர்ச்சி அடுத்த பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களுக்குள் திருச்சி மாவட்டம் வருவதற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x