Published : 16 Jul 2020 11:20 AM
Last Updated : 16 Jul 2020 11:20 AM
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 16) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் / ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இன்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.
தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி / தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
விடைத்தாள் நகல் – இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
12-ம் வகுப்பு மறுதேர்வு எழுதவுள்ள தேர்வர்களுக்கான தேர்வு முடிவு
மார்ச் 24 அன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளான வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் (புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளியிடப்படும். வரும் 27-ம் தேதி அன்று நடைபெறவுள்ள 12-ம் வகுப்பு மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு மட்டும், மறுதேர்வு முடிவடைந்த பின், தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
12-ம் வகுப்பு துணைத் தேர்வு
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT