Published : 09 Jul 2020 03:25 PM
Last Updated : 09 Jul 2020 03:25 PM
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நுழைவுத்தேர்வு பல்வேறு மையங்களில் நடக்கிறது. இதற்கு வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள், பிஎச்டி, முதுநிலை பட்டயப்படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. நாடு முழுவதுமிருந்து ஏராளமானோர் இங்கு படித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பல்கலைக்கழகத்தில் வரும் 2020-21 ஆம் கல்வியாண்டில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு பல்வேறு மையங்களில் வரும் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடக்க உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதுநிலைப் படிப்புகளில் சேர விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளில் சேர எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 கட்டணம். மற்றவர்களுக்கு ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.500 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.100 அதிகரித்துள்ளது. பிஎச்டி, எம்பிஏ படிப்புகளுக்கு எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500-ம், மற்றவர்களுக்கு ரூ.1000-ம் கட்டணமாக உள்ளது.
நடப்பாண்டு புதிதாக ஒருங்கிணைந்த படிப்பில், சமூக மற்றும் பொருளாதார நிர்வாகம் மற்றும் சட்டம் (SEAL) உருவாக்கப்பட்டுள்ளது. எம்எஸ்சி சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பானது, இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது எம்எஸ்சி சூழலியல், எம்எஸ்சி சுற்றுச்சூழல் அறிவியல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுயநிதி எம்பிஏ பிரிவுகளில் நிதி தொழில்நுட்பம், நிதி நிர்வாகம் (பகுதி நேரம்), தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை படிப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் மானுடவியல் மற்றும் தடயவியல் அறிவியலில் டிப்ளோமா படிப்பும், எம்டெக் ஆய்வு புவி அறிவியலும் விண்ணப்பத்தில் இடம் பெறவில்லை.
பல்கலைக்கழத்தில் உள்ள படிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக இணைய தளத்தில் பார்க்கலாம்.
அதற்கான இணைய முகவரி: www.pondiuni.edu.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT