Published : 09 Jul 2020 01:09 PM
Last Updated : 09 Jul 2020 01:09 PM

நீட், ஜேஇஇ, செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி

கரோனா காலத்தில் நீட், ஜேஇஇ, செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற இருந்து, ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் எனவும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வியை உறுதி செய்யும் நோக்கில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட தேர்வுகள் மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* புதிய முகக் கவசங்கள், கையுறைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
* தேர்வு நடக்கும் முன் மாணவர்களுக்குத் தெர்மல் பரிசோதனை கட்டாயம்.
* தேர்வறைக் கண்காணிப்பாளர்களுக்கும் உடல் நிலைச் சான்றிதழ் அவசியம்.
* தேர்வு மைய சுவர்கள், கதவுகள், கதவு கைப்பிடிகள், படிக்கட்டு கைப்பிடிகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் வேண்டும்.
* தேர்வறை, நுழைவு வாயில்கள், பார்வையாளர் அறைகள் சானிடைசர் மூலம் தூய்மையாக்கல் அவசியம்.
* மேற்குறிப்பிட்ட அறைகளில் நாள்தோறும் சானிடைசர்கள் நிரப்பப்பட வேண்டும்.
* ஸ்டிக்கர் அல்லது வண்ணங்கள் மூலம் சமூக இடைவெளியைக் குறிப்பிட வேண்டும்.
* ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் மேசை, நாற்காலிகள் உட்பட அனைத்துப் பொருட்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x