Published : 09 Jul 2020 12:01 PM
Last Updated : 09 Jul 2020 12:01 PM
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இந்தப் பாடக்குறைப்பு ஓராண்டுக்கு மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித்துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களின் பாடச்சுமை 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. இதில் சில பாடங்கள் நீக்கப்பட்டன.
குறிப்பாக 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டன. மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டன.
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் பாடங்கள் நீக்கப்பட்டுள்ள விவகாரம் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் த்ரிபாதி, வெளியிட்டுள்ளார். அதில், ’’கரோனா கால சூழலைக் கருத்தில் கொண்டு 2020- 21 ஆம் கல்வியாண்டுக்கு மட்டுமே பாடத்திட்டக் குறைப்பு அமலில் இருக்கும். சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது.
அதே நேரத்தில் என்சிஇஆர்டியின் மாற்றுப் பாடத் திட்டத்தைப் பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மாற்றுப் பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பாடத் திட்டங்கள் இடம்பெறும். இது தொடர்பாகத் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT