Published : 08 Jul 2020 06:13 PM
Last Updated : 08 Jul 2020 06:13 PM
பள்ளி வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல் என்று சொன்னதும் பள்ளிக்கூடம், வகுப்பறை, ஆசிரியர்கள், பாடப்புத்தகம்...இப்படித்தானே கண்முன்னால் வருகிறது. பள்ளிக்கூட வகுப்பறையில் ஆசிரியர் நின்றபடி பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை விளக்கி குழந்தைகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மதிப்பெண் குவிக்கும் கருவிகளாக அவர்களை மாற்றுவதுதானா கல்வி? வகுப்பறைக்கு வெளியே கல்வியின் கரம் நீள முடியாதா? ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கல்வி மீது அக்கறை கொண்ட வேறு சிலரும் இதில் இணையக் கூடாதா? இதைச் செய்ய காலம் கொடுத்த அவகாசமாக இந்தக் கரோனா காலத்தை ஏன் மாற்றக் கூடாது?... இது போன்ற கேள்விகள் உதித்ததன் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் 'குழந்தைகளின் உலகை ஒருங்கிணைக்கும் தொண்டர்கள்' திட்டம்.
முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, பேராசிரியர் ச.மாடசாமி உள்ளிட்ட மூத்த கல்வியாளர்களின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் செயல்பட்டுவரும் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னெடுப்பு இது. சென்னை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கரோனாவின் கோரத் தாண்டவத்தால் கடந்த நான்கு மாதங்களாக பள்ளிக்கூடங்கள் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. இதில் எங்கே குழந்தைகளைக் கட்டாயம் தேர்வு எழுத வெளியே வரச் சொல்லிவிடுவார்களோ என்கிற பதைபதைப்பில் மார்ச், ஏப்ரல் மாதங்கள் கழிந்தன. பிறகு தேர்வுகள் ரத்து செய்திகள் வெளியானதும் ஆசுவாசம் ஏற்பட்டது. மே மாதம் விடுமுறைக்கான காலகட்டம் என்பதால் குழந்தைகளுக்கு அந்த நாட்கள் அவரவர் வீடுகளிலேயே கழிந்தது. அடுத்து ஜூன் மாதம் பிறந்ததும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் இறங்கின. இதை ஏற்கும் எதிர்க்கும் இரு தரப்பு உருவாகி உள்ளது. இது சரியா தவறா என்பதையெல்லாம் தாண்டி தங்களுடைய குழந்தைகளுக்கு இந்தக் காலகட்டத்தில் கல்வி வாய்க்கவில்லையே என்கிற ஏக்கமும் தவிப்பும் ஏழை எளிய மக்களின் மனத்தில் மேலோங்கி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் குறித்து கலந்து ஆலோசித்து 'குழந்தைகளின் உலகை ஒருங்கிணைக்கும் தொண்டர்கள்' குழந்தைகளைத் தேடிச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள் . அப்படி அவர்கள் என்ன செய்துவருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவர்களை அழைத்துப் பேசினோம்.
வழக்கமான வகுப்பறை அல்ல!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1990களில் அரசுடன் இணைந்து நடத்திய அறிவொளி இயக்கத்தில் பள்ளி மாணவராகத் தன்னை இணைத்துக் கொண்டு முதியோருக்குக் கல்வி கற்பித்தவர் மதுரையில் உள்ள வாசல் பதிப்பகத்தின் பதிப்பாளர் ரத்னவிஜயன். தற்போது இந்த கரோனா காலத்திலும் அவர் உதவிக் கரம் பள்ளிக்கு வெளியே நீண்டு இருக்கிறது.
"கரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளைத் திறக்க முடியவில்லை. இதை கவலைக்குரிய பிரச்சினையாக பார்க்காமல் இந்த கால அவகாசத்தை எப்படி ஆக்கபூர்வமாக மாற்றலாம் என்பது குறித்து பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தினர் அனைவரும் கலந்துரையாடினோம். பள்ளிக்கூடம், வீடு தவிர குழந்தைகளுக்கு மூன்றாவது இடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் மாற்றுக் கல்வி குறித்து பேசும்போதெல்லாம் விவாதிக்கப்படுகிறது. ஆனால் அப்படியொரு மூன்றாவது இடத்தை எப்படிப் படைப்பது, அதற்கான அவகாசம் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் எங்கே உள்ளது என்கிற கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தது. அதற்கான காலம் இதுவே என்று உணர்ந்தோம். போட்டிப் போட்டுப் பாடப் புத்தகங்களை படிக்க வைப்பதற்குப் பதிலாகக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பனைத் திறனை மீட்டெடுப்பதற்கான காலம் இதுவே என முடிவு செய்தோம்.
பாடப்புத்தகங்களுக்கு பதில் கதைப் புத்தகம், பலூன், வண்ணக் காகிதம், பென்சில், சாக்பீஸ், மெழுகுவர்த்தி, ரப்பர் பேண்டு போன்றவற்றை எடுத்துச் சென்று சாமானிய மக்களின் குழந்தைகளுடன் பேசி, விளையாடி, கதை சொல்லி, பாட்டுப் பாடி, எளிய அறிவியல் சோதனைகள் மற்றும் குட்டிக் குட்டி மாயாஜாலங்கள் செய்து காட்டி குழந்தைகளின் உலகை உயிர்ப்பிக்கத் தொடங்கி இருக்கிறோம். கூடவே அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த படித்த உதவும் மனப்பான்மை உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம். அவர்கள் மூலம் குழந்தைகள் மனம் திறந்து பேசி, உரையாடி தங்களுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான களத்தை விரிவுபடுத்தி வருகிறோம். அலைபேசி, மடிக்கணினி மூலம் குழந்தைகளை நாங்கள் அணுகுவதில்லை. குழந்தைகள் உலகில் மனிதர்கள் பிரவேசிக்கும் முயற்சி இது. அதே நேரத்தில் தொழில்நுட்பத்தையும் நாங்கள் புறம் தள்ளவில்லை. எங்களையும் எங்களுடன் கைகோத்து கல்வித் தொண்டில் ஈடுபடும் தன்னார்வலர்களையும் ஒருங்கிணைக்கவும் தகவல் பரிமாறவும் மாற்றுக் கல்விக்கான தரவுகளை பகிர்ந்து கொள்ளவும் ஆன்லைன் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இது ஒரு போதும் வழக்கமான வகுப்பறை அல்ல" என்றார் ரத்னவிஜயன்.
குற்றவுணர்வில் தலைகுனிந்தேன்!
ரத்னவிஜயனுடன் இணைந்து தன்னுடைய மாணவர்களைக் கடந்த மூன்று வாரங்களாக சந்தித்து வருகிறார் மதுரையை அடுத்து வாடிப்பட்டி அருகே உள்ள ஐயங்கோட்டை அரசு மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ராணி குணசீலி.
அவர் கூறுகையில், “நான் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் எடுக்கிறேன். என்னுடைய மாணவர்கள் ஐயங்கோட்டை, தனிச்சியம், ஐயனம்பட்டி, செம்புகுடிப்பட்டி, பி.புதூர், சித்தாளங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆகையால் இந்தக் கரோனா காலத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நேரில் சென்று பார்க்கலாம் என்று கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று கிளம்பினோம். இந்த கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் பேசி அனுமதி பெற்றோம். விளையாட்டுப் பொருட்களுடன் முகக் கவசம், கிருமிநாசினி, ஹேண்ட்வாஷ் ஆகியவற்றை எடுத்துச் சென்றோம். பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது மட்டுமே கடமை என்பதாக அல்லாமல் மாணவர்களின் வாழ்விடத்தைத் தேடிச் சென்றபோதுதான் பல உண்மைகள் புரிந்தன. பல குழந்தைகளின் வீடுகள் சாக்கடைக்கு அருகே, மாட்டுச்சாணம் குப்பை கூளத்துக்கு நடுவே இருந்தன. ஊருக்குள் பெரியவர்கள் அரிதாகவே காணப்பட்டனர்.
பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர், தாத்தா பாட்டி என பெரியவர்கள் அத்தனை பேரும் கல்லுடைப்பது, பால் பண்ணையில் பால் பேக்கட் தயார் செய்வது, பிஸ்கெட் கம்பெனியில் பிஸ்கெட் பொட்டலங்களை அடுக்குவது உள்ளிட்ட கடைநிலை பணியைச் செய்ய வேலைக்கு சென்று இருந்தார்கள். குழந்தைகளோ பராமரிப்பார் இன்றி அடுத்த வேளைக்குச் சாப்பாடும் இன்றி வீதிகளில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வறுமையினால் சில குழந்தைகள் பெற்றோருடன் வேலைக்குச் சென்றுவிட்டதும் தெரியவந்தது. இந்தப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று இருப்பதாக இதுவரை தெரியவில்லை. அதை பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை. கூட்டங்கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளை முதலில் சமூக இடைவெளி விட்டு விளையாட கற்பித்தோம்.
கைகளைக் கழுவி, முகக் கவசம் அணிந்து இருக்க பயிற்றுவித்தோம். முதலில் என்னிடம் படிக்கும் மாணவர்கள் மட்டுமே முன்வந்தார்கள். சிறிது நேரத்தில் எல்லா வயதுக் குழந்தைகளும் எங்களைப் பின் தொடர்ந்தார்கள். சமூக இடைவெளியுடன் அனைத்துக் குழந்தைகளையும் உட்கார வைத்து கதைகள் சொல்லி, வெள்ளைத் தாள்கள் கொடுத்து அவர்கள் பிரியப்பட்டதை எழுத, வரையச் சொல்லியபோது மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள். இதுவரை என்னிடம் பள்ளிக்கூடத்தில் பேசாத மாணவர்கள்கூட மிகவும் பிரியமாகப் பேசினார்கள். முக்கியமாகப் பள்ளிப் படிப்பை விட்டு நிற்கும் சூழலில் இருக்கும் சில மாணவர்களின் நிலை கலங்கடித்தது. அதில் ஒரு மாணவன் தினமும் காலை முதல் வகுப்புக்குத் தாமதமாக வருபவன். அவனுக்குத் தினந்தோறும் பள்ளி வளாகத்தின் குப்பையைப் பொறுக்கும்படி தண்டனை விதிக்கப்படும். அன்று அவனுடைய ஊரில் அவனைச் சந்தித்தபோதுதான் புரிந்தது அவனுடைய உண்மையான நிலை. அவன் வசிக்கும் இடத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாததால் தினந்தோறும் 3 கிலோ மீட்டர் நடந்து பேருந்தைப் பிடித்து பள்ளிக்கு வருவதால்தான் அவன் இத்தனை வருடங்களாகத் தாமதமாக வந்திருக்கிறான். ஆனால், இது தெரியாமல் அவனை இத்தனை காலமாகப் பள்ளி தண்டித்து வந்திருக்கிறது. இனி பள்ளி பழையபடி தொடங்கினாலும் வருவதாக இல்லை என்று அந்த மாணவன் கண்கலங்கியபோது குற்றவுணர்வில் தலைகுனிந்தேன்.
இதேபோன்று மேலும் சில மாணவர்கள் இடைநின்று போகப் பல காரணங்கள் இருந்தன. அவர்கள் அனைவரையும் மீண்டும் பள்ளிக்கூடங்களை நோக்கி அழைத்துவரும் கடமை ஆசிரியராகிய எனக்குள்ளது என்பதை மாணவர்களைத் தேடிச் சென்ற இந்தப் பயணம் அழுத்தமாக உணர்த்தியது.
அடுத்தவேளை உணவுக்கே வழி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளிச் சத்துணவு எவ்வளவு அத்தியாவசியம் என்பதையும் கண்கூடாக உணர முடிந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுக்குரிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று அரசு தற்போது முடிவெடுத்திருப்பதால் விரைவில் என்னுடைய மாணவர்களை மாற்றுக் கல்விக்கான திட்டங்களுடன் அரசி, பருப்பு, முட்டை, குடல் புழு நீக்கும் மருந்து, மாணவிகளுக்கு வழங்கப்படும் நாப்கின்களுடன் தேடிச் செல்லவிருக்கிறேன்" என்றார் ஆசிரியை ராணி குணசீலி.
வெறுமையில் இருக்கும் மாணவிகள்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த விடத்தாக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை முத்துகுமாரி கடந்த ஒரு வாரத்தில் 130க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களுடைய இருப்பிடத்துக்கே சென்று சந்தித்திருக்கிறார்.
குறிப்பாக மாணவிகளின் நிலையை நுட்பமாக எடுத்துரைக்கும் அவர் கூறுகையில், "விடத்தாக்குளத்தில் வசிக்கும் என்னுடைய மாணவர்கள் 50 பேர் இருப்பார்கள். அவர்களைச் சந்திக்கத்தான் சென்றேன். ஆனால், மூன்று மாதங்களுக்கும் அதிகமாகப் பள்ளிக்குச் செல்லாததால் குழந்தைகள் ஏங்கிப் போய் இருக்கிறார்கள். ஆகவே 130 குழந்தைகள்வரை என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் தனி நபராக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அவர்களுடன் உரையாடுவது கடினம் என்பதால் உள்ளூர் தன்னார்வ இளைஞர்களின் உதவியை நாடினேன்.
கல்லூரி படித்து முடித்த இளம் பெண்கள் சிலர் ஆர்வமுடன் முன்வந்தார்கள். அவர்களுடன் இணைந்து குழுமி இருந்த குழந்தைகளைக் குழுக்களாகப் பிரித்து நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். பிறகு நான் எடுத்துச் சென்ற 'பொம்மலாட்டக் கலைஞர் முடிவு', 'கலைவாணனின் நூல்கள்', 'தும்பி இதழ்கள்', ‘யுரேகா யுரேகா, 'வண்ண வண்ண சோதனைகள்', 'எதனாலே எதனாலே இயற்பியல்', 'வேதியியல் சோதனைகள்', 'ஏகலைவன் கதை', 'கி.ரா.வின் கதவு', 'ஆறடி நிலம்' போன்ற சிறுசிறு கதைப் புத்தகங்களை உள்ளூர் தன்னார்வ அக்காக்களிடம் கொடுத்து குழந்தைகளுக்குக் கதை சொல்லச் சொன்னேன்.
குறிப்பாகப் பெண் கல்வி குறித்த பாடலை பாடியபோது குழந்தைகள் மிகவும் ரசித்து கற்றுக்கொண்டு பாடினார்கள். வழக்கமான பள்ளி நாட்களில் இதெல்லாம் சாத்தியமே இல்லாமல் போய்விட்டதை அப்போது சுதாரித்தேன். விடத்தாக்குளத்தைப் பொறுத்தவரை அங்கு வசிக்கும் பதின்பருவச் சிறார்கள் குறிப்பாக ஒன்பதாம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஏப்ரல், மே ஆகிய பள்ளி விடுமுறை மாதங்களில் விறகு வெட்ட, ஆடு மேய்க்க, பருத்தி மில்லில் எடுபிடி வேலை பார்க்க போவது வழக்கம். சொல்லப்போனால் அதில் கிடைக்கும் சொற்ப கூலியைச் சேமித்து வைத்துத்தான் அந்த குழந்தைகள் மேல்நிலை பள்ளி கல்விக்குத் தேவையான சீருடை, நோட்டுப் புத்தகங்களை வாங்குகிறார்கள். ஆனால், இன்றைய சூழலில் கடந்த நான்கு மாதங்களாக இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீண்டும் படிப்பில் ஊன்றும் போக்கில் இருந்து தடம்புரண்டு கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு புறம் வேலைக்குச் செல்லாத ஆண் குழந்தைகள் எலி, முயல் வேட்டை ஆடுவது என்பதாக பொழுதைக் கழிக்கிறார்கள். ஆனால், பெண் குழந்தைகளோ என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமை சூழ்ந்து கிடக்கிறார்கள். ஆகவே நான் ஊருக்குள் சென்றதும் மிகவும் பிரியமாக ஓடிவந்து மகிழ்ச்சி பொங்கப் பல பெண் குழந்தைகள் பேசத் தொடங்கினார்கள்" என்கிறார் ஆசிரியை முத்துகுமாரி.
பெற்றோர் தோழர் ஆகலாம்!
பதிப்பாளர், ஆசிரியர்கள்தான் என்றில்லை ஆவணப்பட இயக்குநரும் குழந்தைகளின் கல்வியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட முடியும் என்ற புரிதலுடன் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்தவர் செல்வா.
அவர் கூறுகையில், "கரோனா ஊடரங்கு அறிவிக்கப்பட்டபோதே அரசு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாலையோர குழந்தைகளைச் சந்திக்க ஆரம்பித்தோம். நிர்க்கதியான நிலையில் இருக்கும் அந்த குழந்தைகளுக்கு வாசிப்பு முகாம்கள் தொடங்கினோம். அதன் பிறகு வீட்டில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும் எதாவது செய்ய முடிவெடுத்தோம். தனி நபராக வீதி வீதியாகச் சென்று அத்தனை குழந்தைகளையும் சந்திப்பது சாத்தியப்படாது. ஆகவே அந்தந்த பகுதிகளில் இளம் தொண்டர்களை உருவாக்க நினைத்தபோது இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் முன்வவந்தார்கள். அவர்களின் துணையுடன் அன்றாடத்தின் அழகை, வாழ்வியல் கல்வியை குழந்தைகளுக்குப் புகட்டத் தொடங்கினோம்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான கதைகள், பாடல்கள், நாடகங்கள், அறிவியல் விளையாட்டு ஆகியவற்றைத் தொண்டர்கள் மூலமாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு பகுதி என்றால் பெற்றோரையும் இதில் ஈடுபடுத்துவது மிக முக்கியம் என்பதை உணர்ந்தோம். ஏனென்றால் நம் வீடுகளில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலும் மனம் விட்ட உரையாடல் நடைபெறுவதில்லை என்பதுதான் நிதர்சனம். பாடத்திட்டத்தில் உள்ளதைப் படிப்பது மட்டுமே கல்வி அல்ல. ஒரு குழந்தையிடம் 8 ஆம் வாய்ப்பாட்டைச் சொல்லு என்று திடீரென கேட்டால் மிரளும். ஆனால், மாத பால் கணக்கு, தாத்தா சாப்பிடும் மாத்திரை கணக்கு என அன்றாடம் நாம் சகஜமாகச் செய்யும் கணக்குகளை விளக்கினாலே குழந்தைகள் எளிதில் கணிதம் கற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு அவர்கள் புரிந்துகொண்டதை எழுதச் சொல்லும்போது தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளை ஆர்வமுடன் தேடுகிறார்கள். இந்த முயற்சியில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் தோழமை மலர்கிறது" என்கிறார் செல்வா.
இவர்களைப் போன்று மேலும் பல ஆசிரியர்களும் குழந்தைக் கல்வி குறித்த அக்கறை கொண்ட தனிநபர்களும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் 'குழந்தைகளின் உலகை ஒருங்கிணைக்கும் தொண்டர்கள்' திட்டத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக கடைப்பிடித்தபடியே வீடடங்கி இருக்கும் குழந்தைகளுக்குப் புத்துயிர் ஊட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்கள்.
மேலும் இதைத் திறம்படக் கொண்டு செல்ல மேற்கொண்டு என்னென்ன புதுமைகள் செய்யலாம் என்பது குறித்து அக்கறையுடன் யோசிக்கிறார்கள். ஏதோ இடைக்கால நிவாரணம் போல இல்லாமல் குழந்தைகள் என்றென்றும் சிறகுகள் விரித்துப் பறக்க புதிய வானத்தைப் படைக்க முயல்கிறார்கள். இவர்களைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள கல்வி ஆர்வலர்கள் இத்தகைய ஆக்கப்பூர்வமான செயற்பாட்டில் இறங்கினால் வகுப்பறைக்கு வெளியே உயிரோட்டமான கல்வி சாத்தியமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT