Published : 03 Jul 2020 08:41 PM
Last Updated : 03 Jul 2020 08:41 PM
தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியில் நடத்த தமிழக உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊடரங்கினால் தேர்வு, மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு, பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பு என கல்வி தொடர்பான பல்வேறு விஷயங்கள் தடைப்பட்டு நிற்கின்றன. அனைத்தும் சீராகி இயல்புநிலை திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தாலும் தற்போதைய சூழலை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை கூடிய விரைவில் தொடங்கப்பட இருப்பதாக உயர்கல்வி துறை அதிகார வட்டம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே திட்டத்தை அமல்படுத்த தமிழக உயர் கல்வித்துறை முயன்றது. ஆனால், கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் ஏராளமான பாடப் பிரிவுகளை முறைப்படுத்துவது, மாணவர் விடுதி வசதிகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பல சிக்கல்களைக் கையாள வேண்டிய நிர்பந்தத்தினால் ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை திட்டமானது கைவிடப்பட்டது.
தற்போது கரோனா சூழல் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காலகட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஆகையால் சோதனை முயற்சியாக இந்தக் கல்வி ஆண்டில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைனிலேயே நடத்தலாம் என்று உயர் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மென்பொருளைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது. கூடவே கல்லூரிகள் மற்றும் அவற்றில் வழங்கப்படும் பாடப் பிரிவுகள், மாணவருக்கான இடங்கள், விடுதி வசதி, ஆய்வுக்கூடம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்த விவரம் அடங்கிய கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்துவது போல கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியில் அதுவும் ஒற்றைச் சாளர முறையில் நடத்துவது கடினம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT