Published : 03 Jul 2020 08:10 AM
Last Updated : 03 Jul 2020 08:10 AM

இணையவழி கல்வியின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள்: மாணவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார் கண் மருத்துவர் மோகன் ராஜன்

சென்னை

இணையவழி கல்வியின்போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கண் மருத்துவர் மோகன் ராஜன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றைத்தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், அதேநேரத்தில் மாணவர்களின் படிப்பும் பாதிக்காமல் இருக்கவும் மாற்று ஏற்பாடாகத் தோன்றுவது ‘இ-லேர்னிங்’ எனப்படும் இணையவழிக் கல்வி. இந்த இணையவழிக் கல்வியை மாணவர்களின் உடல்நலத்துக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படா வண்ணம் அளிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

அந்த வகையில், இணையவழிக்கல்வியை கற்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சென்னைராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநரும், கண் மருத்துவருமான டாக்டர்மோகன் ராஜன் கூறியதாவது:

தற்போது நிலவும் கரோனா அசாதாரண சூழலில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது ஒருமுக்கிய கடமையாகி விட்டது.எனவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வாகத் தென்படுவது இணையவழி வகுப்புதான் (ஆன்லைன் கிளாஸ்).

அதேநேரத்தில் இணையவழி வகுப்புகளால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமோ? குறிப்பாக, கணினி அல்லது ஸ்மார்ட் போன் திரையை தொடர்ந்து பார்க்கவேண்டியிருப்பதால் கண்ணுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ? என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது.

கணினி, மடிக்கணினி, ஐ-பாட், ஸ்மார்ட் போன் போன்றவற்றை பார்ப்பதால் கண் பார்வை பாதிக்கப்படாது. ஆனால், அதற்கு சில பாதுகாப்பு நடைமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அந்த சாதனங்களை கண்ணுக்கு மிக அருகாமையில் வைத்துப் பார்த்தாலோ,ஓய்வே இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாலோ குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவே செய்யும்.

தொடர்ந்து பார்ப்பதால் கண்ணில் வலி அல்லது அழுத்தம் உண்டாகலாம். இவை ஏற்படாமல் இருக்க கணினி திரைக்கும் கண்ணுக்கும் குறிப்பிட்ட இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.

சாதாரணமாக, ஒன்று முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எனில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமும், 6 முதல் 10 வயது வரை உள்ளவர்கள் ஒன்றரை மணி நேரமும், 11 முதல் 13 வயது வரை இருப்பவர்கள் 2 மணி நேரமும், 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 மணி நேரமும் கணினியை பார்க்கலாம். ஆனால், தொடர்ந்து பார்க்காமல் குறிப்பிட்ட நேரம் இடைவெளி அளிக்க வேண்டும். 45 நிமிடங்கள் பார்த்த பிறகு 15 நிமிடங்கள் ஓய்வுதேவை. அப்போதுதான் கண்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். ஓய்வு என்பது கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வரலாம்.

இணையவழி வகுப்பின்போது இருக்கையில் நன்கு வசதியாக அமர்ந்துகொள்ள வேண்டும். கண்ணுக்கும் கணினி திரைக்கும் இடையே ஒரு அடி தூரம் இருக்க வேண்டும். கணினி திரையானது கண்பார்வைக்கு 20 டிகிரிக்கு கீழே இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும். திரையில் அதிக வெளிச்சமாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் கண் கூசும்.

இதுபோன்ற எளிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினால் இணையவழிக் கல்வி வகுப்புகளால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என்பது நிச்சயம் இல்லாத நிலையில் அவர்களின் படிப்பு தொடர இம்முறையே வரப்பிரசாதமாக இருக்கும்.

இவ்வாறு மோகன் ராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x