Last Updated : 02 Jul, 2020 06:03 PM

 

Published : 02 Jul 2020 06:03 PM
Last Updated : 02 Jul 2020 06:03 PM

புதுச்சேரியில் ரேஷன் அரிசி வழங்கல், கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள்; இருவருக்குத் தொற்று: அரசு மீது குற்றச்சாட்டு

பள்ளிகளில் வழங்கப்படும் ரேஷன்

புதுச்சேரி

பள்ளிகளில் ரேஷன் அரிசி தருவது, கணக்கெடுப்பு உள்பட பல்வேறு கரோனா காலப் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் சூழலில் இரு ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பணியாற்றிய ஆறு ஆசிரியர்கள் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு போதிய பாதுகாப்புக் கவசங்களைத் தரவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. ரேஷன் ஊழியர்களுக்குப் பணி தராமலும், அவர்களுக்கு ஊதியம் வழங்காமலும் உள்ளனர். இச்சூழலில் கரோனா தொற்று வந்தவுடன், ஏழை மக்களான சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று அரிசி, பருப்பு தரப்பட்டது. தற்போது மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரசுப் பள்ளிகளில் வைத்து ஆசிரியர்கள் மூலம் அரிசி தரப்படுகிறது. அத்துடன் கரோனா காலப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சூழலில் இப்பணிகளில் ஈடுபட்ட இரு ஆசிரியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி புதுச்சேரி அரசு ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலர் பாரி, தலைவர் மனோகரன் ஆகியோர் கூறியதாவது:

''ஆசிரியர்கள் ஊரடங்கு தொடக்கத்தில் அரிசி, பருப்பு வழங்கும் பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக வீடு வீடாகச் சென்று வழங்கும் பணியில் பலர் ஈடுபட்டனர். தற்போது ரேஷன் கடைகளைத் தவிர்த்து பள்ளிகளில் அரிசி கொண்டு வந்து தரப்படுகிறது. தற்போது பள்ளிகளில் ரேஷன் கார்டைச் சரிபார்த்து அரிசி தரும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்க எந்த நோய்த் தடுப்பு சாதனங்களையும் அரசு தரவில்லை. இதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் அரசு செவிசாய்க்கவில்லை.

ஆசிரியர்கள் செய்ய வேண்டிய கற்பித்தல் பணிகளைத் தவிர்த்து வேறு பணியைச் செய்ய அரசு கட்டாயப்படுத்துகிறது. புதுச்சேரி எல்லைகளில் நின்று கண்காணித்தல், முகக்கவசம் அணியாதவரைக் கண்டறிந்து அபராதம் விதித்தல், வழிபாட்டுத் தலம், கடைகளில் சமூக இடைவெளியைக் கண்காணித்தல், கரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு போன்ற பணிகளைச் செய்ய ஈடுபடுத்துகிறார்கள் அரிசி வழங்கக் குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் உள்ளனர். அவர்களின் நிர்வாகச் சிக்கல்களை களைந்து அவர்களையே அதில் ஈடுபடச் செய்ய வேண்டும். அரிசி தரும் பணியில் இருந்து ஆசிரியர்களையும் பள்ளிகளையும் விடுவிக்க வேண்டும்.

ஏனெனில் இப்பணிகளில் ஈடுபட்ட இரு ஆசிரியர்கள் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பணியில் இருந்த ஆறு ஆசிரியர்கள் உட்பட ஏழு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு அறிவிப்பின்படி இன்னும் ஐந்து மாதங்களுக்கு உணவுப்பொருட்கள் தரும் பணி உள்ளது. தற்போது அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும். கரோனா பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடுவிக்க கல்வித்துறை அமைச்சர் உட்பட பலரிடம் மனு தந்துள்ளோம். கரோனா பணியில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசோதனை தேவை''.

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேபோல் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஆசிரியர் சங்கம் புதுச்சேரி ஆட்சியர் மற்றும் காரைக்கால் ஆட்சியருக்கு இது தொடர்பாக மனுவைத் தந்துள்ளது. சங்கத்தின் செயலர் சதீஷ்குமார் இதுகுறித்துக் கூறுகையில், ''அறிவுசார் துறையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை அது சார்ந்த துறையில் ஈடுபடுத்துவது வழக்கம். எல்லைகளில் பாதுகாப்புப் பணியிலும், அரிசி போடும் பணியிலும் ஈடுபடுத்துவது தவறானது. அவர்களை உடனடியாக இப்பணிகளில் இருந்து விடுவிக்கவேண்டும். தேசத்தின் மிகப்பெரிய சொத்து ஆசிரியர்கள். அவர்களின் துறைக்கு உரிய மரியாதை தருவது அவசியம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x