Published : 02 Jul 2020 03:22 PM
Last Updated : 02 Jul 2020 03:22 PM
பள்ளிகள் பூட்டப்பட்டு 100 நாட்கள் கடந்துவிட்டன. பல குழந்தைகளுக்குப் பள்ளி செல்லும் பழக்கமே மறந்து போய்விடுமோ என்று பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் அப்படி எந்த வாய்ப்புகளும் இல்லாமல் சுற்றித் திரிகின்றனர்.
அப்படிப்பட்ட மாணவர்களைக் கடந்த 66 நாட்களாக தினமும் ஆன்லைன் வழியாகக் கதைகேட்க அலைபேசி மற்றும் கணினிகள் முன்பாக உட்கார வைத்துக் கொண்டிருக்கிறது ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’. உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைக் கதை எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களை ஜூம் செயலி மூலமாக ஒருங்கிணைத்து குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லவும், புத்தகங்களை அறிமுகப்படுத்தவும் செய்கிறது அறிவியல் இயக்கம்.
இதில் கலந்துகொண்டு கதை கேட்கும் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சிறார்களுக்கான ‘புத்தக நண்பன்’ என்ற இந்த நிகழ்வு இன்றோடு 66 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி ஒரு சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்துத் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைமையின் ஆதரவுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார் நாகை மாவட்ட இணைச் செயலாளர் மனத்துணைநாதன்.
’இந்து தமிழ்’ இணையத்திடம் இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் புத்தக நண்பன் நிகழ்வானது உலக புத்தக தினத்தையொட்டித் தொடங்கப்பட்டது. இதற்குக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து 66 நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும், கதைகளின் வழி அவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதும், சுதந்திரமாய், கருத்துகளைத் தனது இயல்பான மொழியில் பகிர்தலையும் உருவாக்குவதும்தான் இந்த நிகழ்வின் நோக்கம். அத்தோடு மகிழ்ச்சிகரமான கற்றலுக்கான சூழலை உருவாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டே இந்நிகழ்வானது நடத்தப்படுகிறது.
முக்கியமாக, குழந்தைகளிடம் கதை சொல்லல், கதை கேட்டல் திறனை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைக் குழந்தைகளாக, அவர்களின் இயல்பான, சுதந்திரமான உணர்வைப் பாதுகாத்திட, அதன்வழி அவர்களுக்கான இயல்பான மகிழ்ச்சியை அடைந்திடக் கதை நிகழ்வுகள் தேவையாக இருக்கின்றன. இது அவர்களிடம் நற்பண்புகளை வளர்த்தெடுக்கிறது.
இந்த புத்தக நண்பன் நிகழ்வில் இதுவரை 80-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கான கதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதிலுள்ள சில கதைகளை குழந்தைகளிடம் பகிர்ந்துள்ளோம். தினம் ஒரு புத்தக எழுத்தாளர்கள், கதைசொல்லிகள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், தமிழக அரசுப் பாடநூல் குழுவில் இடம்பெற்றவர்கள், குழந்தை மையச் செயல்பாட்டாளர்கள், நாடகக் கலைஞர்கள், இளம் விஞ்ஞானிகள் எனப் பலரும் வந்து சிறார்களுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கதைகளைச் சொல்லி வருகிறார்கள்.
மேலும், வாராவாரம் குழந்தைகளும் இதுபோல் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அழகாகக் கதைகளைச் சொல்லி வருகின்றனர். கதைகள் மட்டுமல்ல குழந்தைகள் தனக்குப் பிடித்த எந்த விஷயத்தையும் பகிர்வதற்கான களமாக ’புத்தக நண்பன்’ உள்ளது.
’புத்தக நண்பன்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் உருவாக்கி அதிலும் குழந்தைகள் சொன்ன கதைகளைப் பதிவிட்டும் வருகிறோம். இந்நிகழ்வில் அனைத்து மாவட்டங்களையும் சார்ந்த எல்கேஜி முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பெருமளவில் பங்கேற்கின்றனர். வெளிநாட்டிலுள்ள குழந்தைகளும்கூட இதில் பங்கேற்று வருகின்றனர். தினமும் மாலை ஐந்து மணிக்கு நிகழ்வு தொடங்கும். யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்" என்கிறார் மனத்துணைநாதன்.
புத்தக நண்பன் நிகழ்வில் நீங்களும் கதை கேட்க, கதை சொல்ல வேண்டுமா? இதோ அதற்கான ஜூம் மீட்டிங் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்.
மீட்டிங் ஐ.டி : 3392971274
பாஸ்வேர்ட் : 887766
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT