Last Updated : 01 Jul, 2020 12:09 PM

 

Published : 01 Jul 2020 12:09 PM
Last Updated : 01 Jul 2020 12:09 PM

10-ம் வகுப்புத் தேர்வு ரத்து: மும்பை தமிழ் மாணவர்கள் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மும்பையில் இரு பள்ளிகளில் தமிழ் வழியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதத் தயாராக இருந்த மாணவர்கள், தங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்துமா? என்று விசாரித்தபோது அது இல்லை என்று தெரியவந்தது.

காரணம், தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து தமிழகப் பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு எழுதுபவர்கள் முறைப்படி பள்ளிகளில் படித்தாலும்கூட அவர்களைத் தனித்தேர்வர்களாகவே கருதுகிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை. இதனால், நமக்கு மட்டும் அரசு தேர்வு நடத்துமா? அதற்குள்ளாக மும்பையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கினால் நம்முடைய கதி என்னாவது என்று அங்குள்ள மாணவர்கள் பரிதவித்தனர். அவர்களின் நிலையை மும்பை வழித்தெழு இயக்கம் சார்பில் ஸ்ரீதர் தமிழன் 'இந்து தமிழ்' இணையதளத்திற்கும், தமிழக அரசியல் தலைவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்.

'இந்து தமிழ் திசை' இணையதளத்தைத் தொடர்ந்து, கவிஞர் தாமரை இந்தப் பிரச்சினை குறித்து தனது முகநூலில் எழுதியதுடன், அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருப்பதாகக் கூறினார். பிறகு, தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, ஜோதிமணி எம்.பி., உ.தனியரசு எம்எல்ஏ ஆகியோர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்குக் கடிதம் எழுதினர். அதன் தொடர்ச்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கனிமொழி, வைகோ, தொல்.திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, சீமான், உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மும்பையில் இருந்து ஹால் டிக்கெட் பெற்றுள்ள 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் 69 பேரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார் . இதனால் நிம்மதியடைந்த மும்பை மாணவர்களும், ஸ்ரீதர் தமிழனும் தமிழக முதல்வருக்கும், தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தலைவர்கள், அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x