Published : 30 Jun 2020 04:38 PM
Last Updated : 30 Jun 2020 04:38 PM

கரோனாவால் காற்றாடும் அட்மிஷன் டெஸ்க்குகள்: ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கத் திணறும் தனியார் கல்லூரிகள்

கோப்புப்படம்

கோயம்புத்தூர்

“முன்பெல்லாம் ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி, மணிப்பூர், ரஷ்யா, ஆஸ்திரேலியா, சீனா என பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கச் செல்ல நம் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், சென்னைக்குக் கூடப் போக முடியாத சூழலைக் கரோனா காலம் ஏற்படுத்திவிட்டதால், உள்ளூர் கல்லூரிகளில் சேர்வதைத் தவிர இன்றைக்கு அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், விண்ணப்பங்கள் எவ்வளவுதான் விற்பனை ஆனாலும் 5 சதவீதம்கூடச் சேர்க்கை இல்லை” - இந்தப் புலம்பல்தான் இப்போது தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களைவிட கோவையில் இந்தச் சத்தம் கொஞ்சம் அதிகம்.

தமிழகத்தில் அதிகமான கல்லூரிகள் இருப்பது சென்னையில்தான். அதற்கு அடுத்ததாகக் கோவை மண்டலத்தைச் சொல்லலாம். இங்கே பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 130 கலை, அறிவியல் கல்லூரிகளும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இவற்றில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மிகக் குறைவு. சுயநிதிக் கல்லூரிகளே மிகுதி. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குச் சம்பளத்தை அரசு தந்துவிடுவதால் பெரிய பிரச்சினை இல்லை. சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, மாணவர் கட்டணத்தை வைத்தே ஆசிரியர்களுக்குச் சம்பளம் தர வேண்டிய நிலை. அதனால் அவர்களுக்குச் சம்பளம் மிகக் குறைவு. மாணவர்களிடம் கணிசமாகக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பேராசிரியர்களுக்குச் சம்பளம் அளிக்கின்றன. சிறிய கல்லூரிகளில் ரூ.5 ஆயிரம் தொடங்கி ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் தருவதே பெரிய விஷயம்.

இப்போது கரோனா காலம். செமஸ்டர் தேர்வுகள் நடக்கவில்லை. புதிய அட்மிஷன்கள் போட முடியவில்லை. ஆன்லைன் வகுப்பு, ஆன்லைனில் புதிய மாணவர் சேர்க்கை என்றெல்லாம் ஏதேதோ முயன்றார்கள். உள்ளூர் ஆசிரியர்களை அலுவலகம் வரச்சொல்லி வேலை வாங்கினார்கள். இருந்தும் பெரிதாகப் பலன் கிடைக்கவில்லை.

அதனால் கல்லூரி கல்லாக்களுக்குக் காசு வந்து விழவில்லை. அப்படியிருந்தும் இரண்டு மாதங்களாகப் பெரிய கல்லூரிகள் பெரும்பாலும், தங்களிடம் பணிபுரிகின்றவர்களுக்கு இயன்றவரை சம்பளம் கொடுத்துவிட்டன. சிறிய கல்லூரிகள், 99 சதவீத ஆசிரியர்கள் சம்பளத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டன.

“கரோனா பொதுமுடக்கம் இப்படியே நீடித்தால் பெரிய கல்லூரிகள்கூட, இந்த மாதத்துக்கான சம்பளத்தைத் தருவது பெரிய விஷயமாக இருக்கும்” என்கிறார் கோவையைச் சேர்ந்த பிரபலத் தனியார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாத அவர், கரோனா காலத்தில் கல்லூரிகளின் நிலை குறித்து மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“பொதுவாகக் கலை அறிவியல் கல்லூரிகள் ஆண்டு இறுதி செமஸ்டர் பாடங்களை பிப்ரவரி, மார்ச்சில் நடத்தி முடித்துவிடும். தொடர்ந்து மாதிரித் தேர்வுகள் நடக்கும். பொறியியல் கல்லூரிகளில் மே மாதம்தான் தேர்வுகள் என்பதால் ஏப்ரலில்தான் பாடங்களை நடத்தி முடிப்பார்கள். கரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு கலை அறிவியல் கல்லூரிகள், பாடங்களை நடத்தி முடித்து மாதிரித் தேர்வுகளை நடத்திக்கொண்டிருந்தன. பொறியியல் கல்லூரிகளில் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. கரோனா பொதுமுடக்கம், மாணவர்கள்-ஆசிரியர்கள் கல்லூரிக்கு வரக் கூடாது என்ற அரசு அறிவிப்பு ஒரு பக்கம்.

விடுதிகளையே காலி செய்து அங்கிருந்த மாணவர்களை அவரவர் ஊருக்கு அனுப்பிவிட்ட நிலையிலும் ஆசிரியர்களைப் பெரும்பான்மை நிர்வாகங்கள் கல்லூரிக்கு வரச்சொல்லிவிட்டன. அவர்களை வீட்டிலும், கல்லூரியிலும்கூட சும்மா வைத்துச் சம்பளம் தர அவை தயாராக இல்லை. எனவே ஆன்லைன் வகுப்புகளை நடத்தச் செய்தன. இதற்குப் பிரதான காரணம் அவர்களை வேலை வாங்க வேண்டும் என்பது மட்டுமல்ல; இந்த வகுப்புகள் நடத்துவதன் மூலமாவது மாணவர்கள் தங்கள் தேர்வுக் கட்டணங்களைச் செலுத்துமாறு செய்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.

செமஸ்டர் கட்டணத்தைப் பொறுத்தவரை அவ்வளவு சுலமாக முன்கூட்டியே மாணவர்கள் செலுத்த மாட்டார்கள். அதைச் செலுத்த வைக்க துருப்புச்சீட்டே ‘ஹால் டிக்கெட்’தான். செமஸ்டர் தேர்வு நடத்தும்போது தேர்வுக் கட்டணம் செலுத்தினால்தான் ஹால் டிக்கெட் கிடைக்கும் என்ற குண்டைப் போடுவதால் அப்போதுதான் 90 சதவீதம் கட்டணம் வசூலாகும். ஆனால், இப்போது எல்லோரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு ஆன்லைன் வகுப்பில் வந்ததால் அந்தக் கட்டணத்தை வசூலிக்க முடியாத நிலை.

போதாக்குறைக்கு, எஞ்சியிருந்த பாடங்களையும், 3-வது ‘இன்டர்னல்’, செய்முறைத் தேர்வுகளையும் (ஏற்கெனவே 2 இன்டர்னல் நடத்தப்பட்டுவிட்டதால்) ஆன்லைனிலேயே நடத்தி முடித்த நிலையில், முதல் வருட மாணவர்களையும், இரண்டாமாண்டு மாணவர்களையும் இன்டர்னல் மதிப்பெண்களை வைத்தே பாஸ் செய்துவிட யுஜிசி உத்தரவிட்டுவிட்டது.

இதில் கல்லூரி நிர்வாகங்கள் படு அப்செட். நிறைய மாணவர்கள் தங்கள் கிராமத்தில் டவர் பிரச்சினை, இணைய இணைப்பு கிடைக்கவில்லை என்று சொல்லி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் போனது தனிச் சிக்கல். பெரிய கல்லூரிகளில் போன வருடக் கட்டண வருவாயை வைத்து 2 மாதமாகச் சம்பளம் கொடுத்துவிட்டார்கள். இனி அது சாத்தியமா? இந்த வருடம் மாணவர் சேர்க்கையும் கேள்விக் குறியாகியிருக்கிறது” என்றவர் அதுதொடர்பாக மேலும் பேசினார்.

“இப்போதெல்லாம் பிளஸ் 2 ரிசல்ட்டைப் பார்த்து அட்மிஷன் போடும் வேலையை எந்தக் கல்லூரியும் செய்வதில்லை. 12-ம் வகுப்புத் தேர்வு ஆரம்பிக்கும் பிப்ரவரி- மார்ச்சிலேயே அட்மிஷனுக்கு விண்ணப்பம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அது இம்முறை சுத்தமாகத் தடைப்பட்டுவிட்டது. அதைச் சரிசெய்ய ஒவ்வொரு கல்லூரியும் தங்களது இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவேற்றி, அதிலேயே விண்ணப்பிக்கவும், ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்திச் சேரவும் ஏற்பாடுகளை செய்தன.

விண்ணப்பங்கள் 50 சதவீதம் விற்பனையாகி இருக்கின்றன. ஆனால் அதில், 5 சதவீதம்கூட அட்மிஷனுக்கு வரவில்லை. கல்லூரிகள் திறக்கப்படுமா, தேர்வுகள் நடத்தப்படுமா என்று மாணவர்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும்போது ஆன்லைனில் பணம் செலுத்திச் சேர்வது யார்?

கோவை கல்லூரிகளில் கேரள மாணவர்கள் 40 சதவீதத்துக்கு மேல் இருந்தார்கள். அது நாலைந்து வருடங்களாக கணிசமாகக் குறைந்து இப்போது 10 சதவீதமாக ஆகிவிட்டது. ஏனென்றால், கேரளத்தில் பெரிய கல்லூரிகள் எதுவும் இல்லை என்றபோதும் அவர்கள் மணிப்பூர், பெங்களூரு, டெல்லி எனப் பிற மாநிலக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கப் போய்விட்டார்கள். டெல்லி, ஹைதராபாத், மும்பையிலிருந்து இங்கே வந்து படிப்பவர்களும் இருக்காங்க. அதெல்லாம் இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

இப்போது யாரும் எங்கேயும் போக முடியாது. கல்லூரிகள் எப்போது திறந்தாலும் அவரவர் உள்ளூர்க் கல்லூரியில் சேரவேண்டிய சூழலைக் கரோனா உருவாக்கி விட்டது. இந்தச் சூழல் எப்போது மாறும் என்று தெரியவில்லை. அதிகம் போனால், வரும் டிசம்பர் வரை பெரிய கல்லூரிகள் பல்லைக் கடித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும். அதன் பிறகு என்ன நடக்கும் என்பதைச் சொல்லவே முடியாது” என்று அந்தப் பேராசிரியர் வேதனை நிறைந்த குரலில் சொன்னார்!

கரோனா காலத்தில் கல்லூரிகள் கவலைக்குரியதாக ஆகிக் கொண்டிருப்பது குறித்து பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் முதல்வர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமியிடம் பேசினேன்.

‘‘மாணவர்களிடம் கட்டணம் (fees), நிலுவை (dues) இரண்டுமே வசூலிக்கக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளுக்கான வருவாயே இந்தக் கட்டணம்தான். அதிலும் இந்த முறை நிலுவைக் கட்டணம் நிறைய உள்ளது. அப்படியிருக்க இன்றைக்குப் பெரும்பான்மை கல்லூரிகள் நடத்தவே முடியாத சூழல், ஆசிரியர், பணியாளர் சம்பளம் தர முடியாத சூழல்தான் இருக்கிறது.

பல கல்லூரிகளில் மின் கட்டணம் கட்டக்கூட வசதியில்லாத நிலை வருகிறது. இதன் மூலம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு அரசுதான் ஆக்கபூர்வமாக வழிகாட்ட வேண்டும். ஆசிரியர், பணியாளர் சம்பளத்தையாவது அரசு தந்தால்தான் கல்லூரிகள் தப்பிக்கும்!’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x