Published : 27 Jun 2020 06:55 AM
Last Updated : 27 Jun 2020 06:55 AM
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை தள்ளிவைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நாடுமுழுவதும் அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதிநடைபெற இருந்தது. தமிழகத்தில் 1,17,502 பேர் உட்பட நாடுமுழுவதும் 15,93,452 பேர் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்புநடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.
பல்வேறு தரப்பினர் கோரிக்கை
இந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கரோனா பாதிப்பு குறையும் வரை நீட் தேர்வை நடத்தக் கூடாது அல்லது 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது போல், இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு, பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT