Published : 26 Jun 2020 08:06 PM
Last Updated : 26 Jun 2020 08:06 PM
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கீடு குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்புத் தேர்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. குறிப்பாக 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முழுமையாக நடைபெறவில்லை. இந்தத் தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தன.
இந்நிலையில் சிபிஎஸ்இ, கோவிட்-19 காய்ச்சல் பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்களுக்கு மாற்று மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. குறிப்பாக மாணவர்கள் எழுதிய முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் அக மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று தெரிவித்தது.
பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியாக உள்ள நிலையில், 12-ம் வகுப்புகளின் தேர்வு மதிப்பெண் கணக்கீடு எப்படி என்பது குறித்து சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.
அதன்படி, ''ஏற்கெனவே நடந்த பொதுத் தேர்வுகளை முழுமையாக எழுதி முடித்தவர்களுக்கு, விடைத்தாள்களில் அவர்கள் பெறும் மதிப்பெண்களே மதிப்பிடப்பட்டு வழங்கப்படும். 3 தேர்வுகளுக்கு மேல் எழுதிய மாணவர்களுக்கு, அதில் சிறந்த 3 மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்படும், அனைத்துப் பாடங்களுக்கும் அந்த சராசரி மதிப்பெண்ணே வழங்கப்படும்.
3 பொதுத் தேர்வுகளை மட்டுமே எழுதிய மாணவர்களுக்கு, அதில் இருந்து சிறந்த 2 மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அனைத்துப் பாடங்களுக்கும் அந்த சராசரி மதிப்பெண்ணே வழங்கப்படும். மூன்று தேர்வுகளுக்கும் குறைவாக, அதாவது ஒன்று அல்லது இரண்டு தேர்வுகளை மட்டுமே எழுதியவர்களுக்கு அக மதிப்பீடு மற்றும் செயல்முறைத் தேர்வுகளின் செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
எனினும் தேர்வெழுதி மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், உகந்த சூழல் ஏற்படும்போது நடத்தப்பட உள்ள விருப்பத் தேர்வில் கலந்துகொள்ளலாம். இவர்களுக்குத் தேர்வு முடிவுகளில் பெறும் மதிப்பெண்களே இறுதியானவை'' என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT