Last Updated : 26 Jun, 2020 01:16 PM

 

Published : 26 Jun 2020 01:16 PM
Last Updated : 26 Jun 2020 01:16 PM

மும்பை தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதில் என்ன தயக்கம்?- முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்த கையோடு, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இதேபோல பிற மாநிலங்களில் வாழ்கிற தமிழகப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது. அவர்கள் தனித்தேர்வர்களாக கருதப்படுவதால், தேர்ச்சி வழங்க அரசு தயங்குவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

’’பத்தாம் வகுப்புத் தேர்வைத் தனித்தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிப்பதில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஏன் இவ்வளவு தயக்கம் என்பது புரியவில்லை.

நாடெங்கிலும் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் ( CBSE ) பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்குமே பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து என்றான பின்னர், ஒப்பீட்டளவில், எண்ணிக்கையில் மிக மிகக் குறைவாகவே உள்ள தனித்தேர்வர்களுக்குத் தேர்ச்சியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதும், அவர்களுக்கு மாத்திரம் எப்படியேனும் தேர்வு நடத்த வேண்டும் எனத் துடிக்கும் சில அதிகாரிகளின் ஆலோசனைகளுக்குத் துணை போவதும் இந்தத் துறைக்கு அழகல்ல.

குறிப்பாக, மும்பையில் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருமே தனித்தேர்வர்களாகவே கருதப்பட்டு அவர்களுக்குத் தேர்வுத் துறையின் சார்பில் தேர்வு நடத்தப்படுகின்றது. மும்பை நகரம் கரோனா தொற்றின் பிடியில் இருக்கும்போது அவர்களால் அங்கே தேர்வு எழுதுவது சாத்தியமா என்பதைத் துறை உணர்ந்து பார்க்க வேண்டும்.

11 ஆம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கினால், மும்பையில் உள்ள தமிழ்வழி மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறி அவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்குப் போக இயலாத நிலை உருவாகும்.

கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலரும் இது குறித்து வலியுறுத்தித் தனித்தேர்வர்களை மற்ற மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் முயற்சியினைக் கைவிட்டு அவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, தனது வழக்கமான குழப்பத்தை விடுத்து இப்போது புதிதாகத் தொடங்கி இருக்கும் “ஒரு கண்ணில் வெண்ணையையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும்” கொள்கையைக் கைவிட வேண்டும்.பள்ளிக் கல்வித்துறை முன்வராவிட்டால் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு மாணவர்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும்’’.

இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x