Published : 26 Jun 2020 12:59 PM
Last Updated : 26 Jun 2020 12:59 PM
கரோனா பேரிடர் ஏற்பட்டு 100 நாட்களைக் கடந்த நிலையிலும் மாணவர் பசியைப் போக்க புதுச்சேரி அரசு எதுவும் செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மாணவர் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவில் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு முதலான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். அத்துடன் "மாணவர்களின் மதிய உணவுக்காக வைத்திருக்கும் அரிசி முதலான உணவுப் பொருட்களை கரோனா காலத்தில் பட்டினி கிடக்கும் ஏழை மாணவர்களுக்குக் கல்வித்துறை வழங்க வேண்டும்!" என்று புதுச்சேரி அரசிற்கும் கல்வித்துறைக்கும் கடிதம் எழுதினர். எனினும் கரோனா பேரிடர் காலத்தில் பட்டினியில் உள்ள மாணவர்களுக்கு, அந்த உணவுப் பொருட்களை வழங்க இதுவரை புதுச்சேரி அரசும் கல்வித்துறையும் முன்வரவில்லை.
இந்நிலையில் புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஆசிரியர் சங்கத்தின் தலைவர் செங்கதிர், பொருளாளர் ரமேஷ், செயலர் சதீஷ்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மதிய உணவுத் திட்டத்தில் இருப்பில் உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான பொருட்கள், செலவு செய்யாத தேசிய பசுமைப் படை நிதி , வழங்கப்படாத மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா நிதி, ரொட்டி, பால் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடத்துவதற்காக வழங்கப்படும் நிதி, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி ,10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 100% பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி உட்பட இன்னும் பல செலவு செய்யாத நிதிகளை ஒருங்கிணைக்க வேண்டும். அந்நிதியை மாணவர் பசி போக்கவும் கரோனாவிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்த அரசும் கல்வித் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா பேரிடர் ஏற்பட்டு நூறு நாட்களைக் கடந்த நிலையிலும் ஏழை மாணவர்களின் பசியைப் போக்க புதுச்சேரி அரசு ஏதும் செய்யாதது ஏமாற்றத்தைத் தருகிறது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளைக் கல்வித்துறை அழைத்துப் பேசியது. அப்போது மதிய உணவுத் திட்டத்திற்கான தானியங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஒவ்வொரு மாணவருக்கும் ரூபாய் 300 வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கு நிதிப் பற்றாக்குறை உள்ளதால் ஆசிரியர்கள் தங்களின் மூன்று நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கோரினர். எனினும் இது தொடர்பான ஆசிரியர்களின் சந்தேகங்களுக்குப் பதில் தரவில்லை.
ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி முதலான அத்தியாவசியப் பொருட்களை ஆசிரியர்கள் தாங்களாகவே தந்துள்ளனர். அதேபோல கரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை ஆசிரியர்கள் அனைவரும் தந்துள்ளோம். இந்நிலையில் கரோனா காலத் துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற புதுவை அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும், அமைச்சரும் அதிகாரிகளும் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்''.
இவ்வாறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT