Published : 25 Jun 2020 07:10 PM
Last Updated : 25 Jun 2020 07:10 PM
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ததுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதேபோல மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தபடி, தமிழக பாடத்திட்டத்தின்படி பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று ‘மும்பை விழித்தெழு இயக்கம்’ கோரிக்கை விடுத்தது. இதற்கு ஆதரவாக கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி அமைப்பாளர் சீமான், ஜோதிமணி எம்.பி. ஆகியோரும் அறிக்கை வெளியிட்டனர். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த தமிழ் மாணவிகள் சிலர் தமிழக முதல்வருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
மும்பை தாராவி கம்பன் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் த.அனிதா என்ற மாணவி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
’’தமிழக முதல்வருக்கு வணக்கம். ஐயா, தமிழ்நாட்டில் அறிவித்ததைப் போலவே மும்பையில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களாகிய எங்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். மும்பையில் அடுத்த மாதம் 11-ம் வகுப்பு தொடங்க இருக்கிறது. எங்களுக்கு இதுவரையில் தமிழக அரசு 10-ம் வகுப்புத் தேர்வையும் நடத்தவில்லை. தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கவில்லை.
இதனால் நாங்கள் 11-ம் வகுப்பில் சேர முடியுமா, ஒரு வருடம் வீணாகி விடுமா என்று தெரியவில்லை. இப்போது இதனால் எங்களுக்கு, தமிழ் வழியில் படிக்காமல் இந்தி, மராத்தி வழியில் படித்து இருக்கலாமோ என்கிற எண்ணம் வருகிறது. கரோனா பயத்துடன் சேர்ந்து இந்த பயத்திலும் இருக்கிறோம்’’.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் மாணவி எழுதியிருக்கிறார்.
இதேபோன்ற கடிதத்தை செ.நர்மதா, து.சந்தியா ஆகிய மாணவிகளும் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT