Published : 25 Jun 2020 04:10 PM
Last Updated : 25 Jun 2020 04:10 PM

பள்ளி மாணவர்களின் முதல்பருவத் தேர்வு ரத்து?- கல்வித்துறை பரிசீலனை

கரோனா சூழலில் தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை நடப்புக் கல்வி ஆண்டின் முதல்பருவத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் முடிவாகாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பள்ளி வகுப்புகளின் பாடங்களைக் குறைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வு குழு தனது அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. அதில், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முதல்பருவப் பாடம் மற்றும் தேர்வுகளை ரத்து செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

என்ன காரணம்?
வழக்கமாகப் பள்ளிகளில் காலாண்டு அல்லது முதல் பருவத் தேர்வு வழக்கமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடக்கும். கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகளைத் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இதனால் பருவத்தேர்வு மற்றும் அதற்கான பாடமுறையை ரத்து செய்து, அடிப்படைக் கல்வியை வழங்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர சுழற்சி முறையில் காலை, மாலை என இரண்டு வேளைகளில் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளும் அக்குழுவின் அறிக்கையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x