Published : 24 Jun 2020 02:37 PM
Last Updated : 24 Jun 2020 02:37 PM
கரோனாவால் பெண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் கற்றலில் பாலின இடைவெளி ஏற்படலாம் என்றும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
யுனெஸ்கோவின் சர்வதேசக் கல்விக் கண்காணிப்பு அமைப்பின் ஆண்டறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை, கற்பவர்களின் குடும்பப் பின்னணி, அடையாளம், பாலினம், இருப்பிடம், இனம், வறுமை, இயலாமை, மொழி, மதம், இடப்பெயர்வு, நம்பிக்கை, அணுகுமுறை, பாலியல் அடையாள வெளிப்பாடு ஆகியவை உலகம் முழுவதும் உள்ள கல்வி முறைகளில் புறக்கணிக்கப்பட்டதன் காரணங்களை முழுமையாக அலசியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
''உலகம் முழுவதும் 41 நாடுகள் மட்டுமே சைகை மொழியை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளன. இணைய வசதியைப் பெறுவதில்தான் சர்வதேச அளவில் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றனவே தவிர தேவைகளுடன் கூடிய குழந்தைகளைக் கண்டறிவதில் இல்லை. உலகம் முழுவதும் 33.5 கோடி சிறுமிகள் தங்களின் மாதவிடாய்க் காலத்தில் தண்ணீர், சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் இல்லாமலே பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர்.
குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகளின் கல்வி தொடர்பான தகவலை, பாதி நாடுகள் (குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்) சேகரிப்பதில்லை. தனிப்பட்ட குணநலன்களை வைத்து, உண்மையான தகவல்களைப் பெற முடியும். வீட்டுக் கணக்கெடுப்புகள் நடத்தப்படவே இல்லை. அதாவது 41 சதவீத நாடுகளில் அத்தகைய கணக்கெடுப்புகள் நடக்கவில்லை. கற்றல் குறித்துப் பெரும்பாலும் பள்ளிகளில் மட்டுமே கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது, பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் குறித்த விவரம் இதில் இல்லை.
பொதுவாகவே கல்வி முறைகள், சிறப்புத் தேவைகளுடன் உள்ள கற்போரைக் கணக்கில் கொள்வதே இல்லை.’’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யுனெஸ்கோ கல்விக் கண்காணிப்புக் குழுவின் இயக்குநர் மனோஸ் ஆண்டோனினிஸ் கூறும்போது, ''நமது கல்வி முறைகள் குறித்துப் புதுமையாகச் சிந்திக்க கோவிட்-19 முழுமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது ஒரே நாளில் நடந்துவிடாது. அனைத்துக் குழந்தைகளையும் ஒரே கூரையின் கீழ் வைத்துக் கற்பித்துவிட முடியாது. அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகம் இடைநிற்றலும் நிகழ வாய்ப்புள்ளது. இதனால் பாலின இடைவெளியும் அதிகரிக்கலாம். இவற்றை அறிந்து சரிசெய்ய உலக நாடுகள் முன்வர வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT