Published : 24 Jun 2020 12:08 PM
Last Updated : 24 Jun 2020 12:08 PM
கரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பொதுமுடக்கம் அமலுக்கு வந்த காலத்திலிருந்து, ‘கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்’ என்று அரசே சொல்கிற காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்டோம். பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பலாம் என்ற நம்பிக்கை வருகிற காலத்தை நாம் எட்ட பல மாதங்கள் ஆகலாம். இடைப்பட்ட காலத்தில் பள்ளிக்கல்வி குறித்து நாம் என்ன யோசிக்கலாம்? என்று கல்வியாளர்களிடம் பேசினோம்.
கு.காந்தி, ஆசிரியர், ராமநாதபுரம்:
அவசரப்பட்டு பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டாம். முதல் பருவம் முழுவதும் தள்ளிப்போனாலும் பரவாயில்லை. அதற்குள்ளாக மருந்து, தடுப்பூசி போன்ற தீர்வுகள் வர வாய்ப்பிருக்கிறது. இயற்கைச் சீற்றம், மாணவர் கிளர்ச்சி காலங்களில் அரசே மாதக்கணக்கில் பள்ளிக்கூடங்களை மூடிய வரலாறு இருக்கிறது. காலப்போக்கில் பெரிய வகுப்புகளை மட்டும் திறக்கலாம். தொடக்கக் கல்வியைப் பொறுத்தவரையில், அந்தந்த வகுப்பு மாணவர்களே தாங்களாகக் கற்றுக் கொள்ளக்கூடிய கற்றல் அட்டைகளை வழங்கலாம். முதல் பருவத்தில் அவர்கள் பெற வேண்டிய முக்கியமான திறன்களை மேம்படுத்த இது கண்டிப்பாக உதவும்.
பி.ரத்தினசபாபதி, கல்வியாளர்:
இந்த நேரத்தில் ஆன்லைன் கல்வியே சரியான வழிமுறை என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. 50 ஆண்டுகளாக பல்வேறு சட்ட திட்டங்களைப் போட்டு, சிரமப்பட்டு விளிம்பு நிலைக் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். ஆன்லைன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், இவர்களில் அநேகம் பேர் வெளியே போய்விடுவார்கள். கல்வி என்பது வாழ்க்கைக்கு மிகமிகத் தேவையான ஒன்று என்ற ஏழைகளின் எண்ணத்தை மாற்றி, கல்வி என்பது ஆடம்பரப் பொருள், அது பணக்காரர்களுக்குத்தான் சரிப்பட்டுவரும் என்ற எண்ணத்தை அரசே ஏற்படுத்திவிடக்கூடாது. கல்லூரி, கருத்தரங்கிற்கு வேண்டுமானால் ஆன்லைன் சரிப்பட்டு வரலாம். பள்ளிக்கல்விக்குக் கண்டிப்பாக அது ஒத்துவராது.
ஏற்கெனவே நம்முடைய அரசு, புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்காமல் தற்காலிக ஆசிரியர்களை வைத்தே ஒப்பேற்றி வருகிறது. நாளடைவில் ஆசிரியர்களுக்கு மாற்றாக கணினியைப் புகுத்தி, செலவைக் குறைக்கவும் திட்டமிடுவார்கள் என்பதால் இது ஆபத்தான திட்டம் என்கிறேன்.
பிரபா கல்விமணி, கல்வியாளர்:
பள்ளித் திறப்பில் அவசரப்பட வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்தும். அதேநேரத்தில் பொதுமுடக்கமே எல்லாவற்றுக்கும் தீர்வாகிவிடாது. அது தற்காலிக ஏற்பாடுதான். அந்தக் காலகட்டத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும். மிகக்குறைந்த மாணவர்களை வைத்துப் பாடம் நடத்த பல நாடுகள் முன்வந்திருக்கின்றன. அதனை இங்கேயும் நடைமுறைப்படுத்துவது பற்றி யோசிக்கலாம். எங்கள் பள்ளியிலும், கிராமப்புற அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் தனிமனித இடைவெளியைப் பற்றிய கவலை இருக்காது. மாணவர்கள் அதிகமாக இருக்கிற பள்ளிகளில் ஷிஃப்ட் முறையைக் கடைப்பிடிக்கலாம்.
இந்த நேரத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன். இந்த ஆண்டு என்றில்லை எப்போதுமே பத்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு தேவையில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் நாம் பருவத்தேர்வு முறையையே கடைப்பிடிக்கிறோம். அதாவது முதல் பருவத்துக்கான தேர்வு முடிந்ததும், அந்தப் பாடங்களை ஒதுக்கிவிட்டு, அடுத்தடுத்த பருவத்துக்கான பாடங்களையும், தேர்வுகளையுமே நடத்துகிறோம். 10-ம் வகுப்பில் மட்டும் ஏன் எல்லா மண்ணையும் அள்ளி அவர்கள் தலையில் மொத்தமாகக் கொட்ட வேண்டும்?
பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்:
பெற்றோர்களில் பலர் வருமான இழப்பு, சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு என்று தவிக்கிற நேரம் இது. புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் வாழ்வாதாரத்தையும், உயிரையுமே இழந்திருக்கிறார்கள். இந்த நேரத்திலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படி. படிப்பைப் பற்றி மட்டும்தான் நீ சிந்திக்க வேண்டும், வேறு எதைப்பற்றியும் சிந்திக்காதே என்று சொல்வது அபத்தமானது. இந்தப் பேரிடர் காலத்தில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டால்தான், நம் குழந்தைகள் மனிதத்தன்மையுடன் வளர்வார்கள். அவர்கள் வாழ்க்கைப் பாடத்தைக் கற்கட்டும். சுற்றுச்சூழலைப் பார்க்கட்டும். நாளிதழ்களை வாசிக்கட்டும். பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் உரையாடட்டும்.
கேள்விகள் கேட்டு, பதில் பெறட்டும். சட்டப்பேரவை, நாடாளுமன்றம், நீதிமன்றம், உள்ளாட்சி பற்றி எல்லாம் பள்ளிக்கூடங்கள் வாயிலாகப் படிப்பதைக் காட்டிலும் இந்த நேரத்தில் செயல்பாடுகளைக் கவனிப்பதன் வாயிலாக அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு அரசும், பெற்றோரும் உதவினால் மாணவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மாறாக, ஆன்லைன் கல்வி என்று சொல்லி, அவர்களை மேலும் மேலும் வெளிச்சிந்தனையற்றவர்களாகவும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களாகவும் மாற்ற வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்து.
த.வி.வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி:
மரபு, அறிவியல் இரண்டையும் சேர்த்து தீர்வை யோசிக்கலாம். தினமும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்தில் இரண்டு, மூன்று நாள் மட்டும் வந்தால் போதும் என்று சொல்லலாம். அவர்களுக்கு விடுப்பு தருகிறபோது மற்ற மாணவர்களைப் பள்ளிக்கு அழைக்கலாம். இணையவழிக் கல்விக்குப் பதில் தொலைக்காட்சி வழி கல்வியைப் பற்றி அரசு யோசிக்கலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 98 சதவீத வீடுகளில் டிவி இருக்கக்கூடும். முன்னணித் தொலைக்காட்சி சேனல்களில் தலா இரண்டு மணி நேரத்தை அரசு கேட்டுப் பெற்றுப் பாடங்களை நடத்தலாம். அதில் ஏற்படுகிற சந்தேகங்களை வாரத்தில் இரு நாட்கள் பள்ளி செல்கிறபோது மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். வாட்ஸ் - அப் வழியாகக் கேள்விகளை அனுப்பி பதில் பெறுவது போன்ற அறிவியல் வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. கேரளத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும், கல்வி நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. தனிமனித இடைவெளியுடன் மாணவர்களை அந்தந்த ஊரில் பிரித்துவைத்துப் பாடம் நடத்தி ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். அவற்றை நம்மூருக்கு ஏற்றபடி மாற்றி யோசித்துச் செயல்படுத்தலாம்.
இவ்வாறு கல்வியாளர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT