Published : 23 Jun 2020 06:34 PM
Last Updated : 23 Jun 2020 06:34 PM
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய மண்டலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைக் கரோனா தனிமைப்படுத்துதல் முகாம்களாக மாற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கரோனா தனிமைப்படுத்துதல் முகாம் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான சே.நீலகண்டன் தலைமையில் இன்று காலையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
அதில், ‘’மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் தனிமைப் படுத்துதல் முகாம் அமைப்பதை மக்கள் விரும்பவில்லை. ஜூன் 30-ம் தேதி முதல் மாணவர்களுக்குத் தேவையான புத்தகம், காலணிகள், சீருடைகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில் பள்ளிகளை முகாம்களாக மாற்றுதல் பொருத்தமாக இருக்காது. அதனால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT