Published : 23 Jun 2020 06:03 PM
Last Updated : 23 Jun 2020 06:03 PM
நீட், ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரி தேசிய அளவில், #NoExamsInCovid என்ற ஹேஷ்டேகுடன் மாணவர்கள் சமூக வலைதளங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையறை இல்லாமல் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து, பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன. சில கல்வி நிறுவனங்கள் தங்களின் செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகளைத் திட்டமிட்டுள்ள தேதியில் ஜூலை மாதத்தில் நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
போட்டித் தேர்வுகளையும் செமஸ்டர் தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்திய தேசிய மாணவர் சங்கம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியாவில் கரோனா வைரஸ் நோயாளிகள் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மாணவர்களைத் தேர்வு மையம் வந்து தேர்வெழுதச் சொல்வது சரியான செயல் அல்ல.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் தேர்வின்போது மாணவர்களுக்குத் தொற்று பரவினால் அதற்கு யார் பொறுப்பு?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என சமூக வலைதளங்களில் #StudentLivesMatter என்ற பிரச்சாரத்தை அண்மையில் கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT