Last Updated : 23 Jun, 2020 02:47 PM

 

Published : 23 Jun 2020 02:47 PM
Last Updated : 23 Jun 2020 02:47 PM

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை: கோவா முதல்வர் அறிவிப்பு

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையறை இல்லாமல் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து, பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன.

கல்வியாளர்களும் பெற்றோர்களும் ஆன்லைன் கற்றலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ’’மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இணைய வசதி இல்லை. எல்லா மாணவர்களிடமும் ஸ்மார்ட் போன் வசதியும் இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளைக் கற்கக் கோரி மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

எனினும் ஆன்லைன் கற்றலை நிகழ்த்த சுமார் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி கட்டாயம் என்று எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அனைத்துப் பள்ளிகளும் இணையவழிக் கல்வியைக் கட்டாயப்படுத்தாமல் முழு பாடத்திட்டத்தையும் கற்பிக்க வேண்டும்.

கரோனா சூழலைப் பொறுத்து பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஜூலை 15-ம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும். எனினும் புதன்கிழமை (நாளை) முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும். கற்பித்தலுக்கான முன் தயாரிப்புப் பணிகளில் அவர்கள் ஈடுபட வேண்டியது அவசியம்’’ என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குக் கர்நாடக மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x