Last Updated : 22 Jun, 2020 05:24 PM

3  

Published : 22 Jun 2020 05:24 PM
Last Updated : 22 Jun 2020 05:24 PM

இணையம் வழியே நடந்த முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தேர்வு!

பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்திக் கொண்டிருக்க, இதில் இன்னும் ஒருபடி மேலே போய் ஆராய்ச்சி மாணவர்களுக்காக பொது வாய்மொழித் தேர்வையே ஆன்லைனில் நடத்தி முடித்து இருக்கிறார்கள்.

பொதுவாக, 'வைவா' எனப்படும் வாய்மொழித் தேர்வுகள் அரங்கத்தில் அறிஞர்கள் முன்னிலையில் கருத்து விவாதங்களுக்கு இடையே நடக்கும். ஆனால், இந்தக் கரோனா காலத்தில் பொதுமுடக்கம் காரணமாக, திருவாரூர் திரு.வி.க. கலைக் கல்லூரியில் இந்தத் தேர்வு இணையம் மூலமாகவே நடந்து முடிந்திருக்கிறது.

திருவாரூர் திரு.வி.க. கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை ஆராய்ச்சி மாணவியான வீ.பொற்கலை தனது முனைவர் பட்டப் படிப்பு நிறைவில் பொது வாய்மொழித் தேர்வுக்காகக் காத்திருந்தார். ஆனால், பொதுமுடக்கம் காரணமாக அதற்குக் கால தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், அவரது வழிகாட்டி நெறியாளர் முனைவர் பென்னி அன்புராஜ், தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரிக்கு மாறுதல் ஆனார். அதனால் அந்தக் கல்லூரியின் வாயிலாக பொற்கலைக்கு பொது வாய்மொழித் தேர்வை இணையம் வாயிலாகவே நடத்தத் திட்டமிடப்பட்டது. அதற்கு, சம்பந்தப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியும் பெறப்பட்டது.

அதன்படி தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் இயற்பியல் துறையில் இன்று காலை 11 மணி அளவில் பொற்கலையின் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித் தேர்வு இணைய வழியில் நடைப்பெற்றது. புறநிலைத் தேர்வாளர் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் க.ரவி தலைமையில் இந்த வாய்மொழித் தேர்வு நடைபெற்றது.

நெறியாளரும், இக்கல்லூரி இயற்பியல் துறைத் தலைவருமான முனைவர் துரை, ஆய்வாளர், வழிகாட்டி நெறியாளர், புறநிலைத் தேர்வாளர் ஆகியோரை அனைவருக்கும் அறிமுகப்படுத்திப் பேசினார். வீ.பொற்கலை நாகையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆய்வுக் கட்டுரையின் பொருண்மையை விளக்கியுரைத்தார்.

அவரவர் வீட்டிலும், கல்லூரியிலும் இருந்தபடியே இணைய வழியில் கல்லூரி முதல்வர் முனைவர். த.அறவாழி மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்களும், பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். உலக அளவில் கலந்துகொண்ட 55 பார்வையாளர்களில் 10 பேரின் வினாக்களுக்கு ஆய்வாளர் தகுந்த விடையளித்தார்.

இதனையடுத்து ஆய்வாளர் பொற்கலைக்கு முனைவர் பட்டம் வழங்க பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x