Published : 22 Jun 2020 11:54 AM
Last Updated : 22 Jun 2020 11:54 AM

தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டண பாக்கி: அரசு உடனே வழங்குக- நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் சங்கம் கோரிக்கை

நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள ஆர்.டி.இ. கல்விக் கட்டணத்தை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

’’கரோனா ஊரடங்கு முடிந்த பின்பும் பள்ளி, கல்லூரிகளைத் தவிர அனைத்தும் இயங்குகின்றன. இந்த சூழலில் பள்ளிகளைத் திறக்காமல், மாணவர் சேர்க்கை, புதிய பழைய கல்விக் கட்டண வசூல் ஆகியவை இல்லாமல் ஆசிரியர்களுக்குச் சம்பளம் தர முடியவில்லை. இதனால் மின்கட்டணம், பி.எஃப், பள்ளி வாகனங்களுக்கான இன்சூரன்ஸ், சாலை வரி, இருக்கை வரி கட்ட முடியாமல் தனியார் பள்ளிகள் தவிக்கின்றன.

எப்பொழுது பள்ளியைத் திறப்போம் என்று தெரியாத இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி சட்டப்படி 25% மாணவர்களை சேர்த்திட்ட வகையில் எங்களுக்கு அரசு தர வேண்டிய கல்விக் கட்டண பாக்கி இன்னும் நிலுவையில் உள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டும் அரசு நிர்ணயித்த முழுமையான கட்டணம் சென்னை மாவட்டத்துக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மிகக் குறைந்த கட்டணத்தைப் பெற்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆரம்பக்கல்வியின் அடித்தளமாக உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்குத் தர வேண்டிய கல்விக் கட்டண பாக்கி இன்னும் 40% நிலுவையில் உள்ளது. அத்துடன் 2019-20 ஆம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டண பாக்கி 100% முழுவதுமாக நிலுவையில் உள்ளது.

அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கும் உடனடியாகக் கட்டண பாக்கியை வழங்க வேண்டும். அப்போதுதான், பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் தந்து அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும். எனவே உடனடியாகத் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ஆர்.டி.இ கல்விக் கட்டண பாக்கியை அரசு உடனே வழங்க வேண்டும்’’.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x