Published : 21 Jun 2020 01:35 PM
Last Updated : 21 Jun 2020 01:35 PM
நாடு முழுவதும் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரே சீரான கல்விமுறையும், பொதுப் பாடத்திட்டமும், பாடங்களையும் உருவாக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ கல்விமுறையை இணைத்து நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை உருவாக்கத் தேசிய கல்வி ஆணையத்தை மத்திய அரசு அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இது பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் பலனைப் பரவலாக மாணவர்கள் அடையவும் உதவும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் பள்ளிக் கல்வி கொண்டு செல்லப்படுவது சிறந்த தீர்வாகுமா? ஒரே நாடு ஒரே கல்வி முறை நல்ல திட்டமா? சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியுமா? உள்ளிட்ட கேள்விகளோடு வல்லுநர்களுடன் உரையாடினோம்.
ஜனநாயகத்துக்குப் பாதகம்!
தேசிய கல்வி ஆணையத்தை நிறுவும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? இதைச் சட்ட ரீதியாக எப்படிப் புரிந்துகொள்வது? என்ற கேள்விகளை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் எழுப்பினோம்.
“கோத்தாரி கமிஷன்படி மத்திய அரசுப் பள்ளிக் கல்வியில் நேரடியாகத் தலையிடக் கூடாது. யூனியன் பிரதேசங்கள் இருப்பதாலும் மத்திய அரசு ஊழியர்கள் மாநிலம் விட்டு மாநிலம் பணி இடமாற்றம் செய்யப்படுவதாலும் கண்டோன்மன்ட் பகுதிகளில் ராணுவ அதிகாரிகள் வாழ்வதாலும் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியது. அதன்படி ஒரு எக்சிகியூடிவ் ஆர்டர் மூலம் சிபிஎஸ்இ பள்ளிகளை மத்திய அரசு 1962 ஆம் ஆண்டில் நிறுவியது. பிறகு நாடு முழுவதும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதற்கிடையில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து கன்க்கரன்ட் லிஸ்ட் எனப்படும் இசைவு பெற வேண்டிய பட்டியலுக்கு 1976 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. ஆசிரியர் கல்வி தேசிய ஆணையமும் மத்திய அரசுக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆகையால் இன்றைய நிலையில் எந்தப் பள்ளி ஆசிரியரின் அரசு நியமனமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழே உள்ளது. இப்படி பள்ளிக்கல்வி, உயர்கல்வி என படிப்படியாக தன்னுடைய அதிகாரப் பரப்பை மத்திய அரசு விரிக்க ஆரம்பித்தது.
இன்றைய நிலையில் தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆசிரியர் பயிற்சி மையம் தொடங்க வேண்டுமானால் மத்திய அரசின் ஒப்புதல் அவசியம். இது போதாதென்று கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆகையால் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணி சாத்தியமில்லை. ஆக சிறிது சிறிதாக மத்திய அரசு கல்விப் பரப்பை முழுவதுமாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இந்நிலையில் மத்திய அரசு நேரடியாகச் செய்யாமல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதாகக் காட்டிக்கொள்ளும் முயற்சி இது. ஆனால், அப்படி நடக்குமானால் மாநில அரசுகளுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச அதிகாரமும் பறிபோய்விடும் அபாயம் உள்ளது.
நீதித்துறை உட்பட அனைத்துத் துறைகளும் ஒரே நாடு ஒரே கொள்கை என்ற திட்டத்துக்குள் கொண்டுவரப்படுவது ஜனநாயகத்துக்குப் பாதகம் விளைவிக்கும். பள்ளிக்கல்விதான் என்றில்லை. அகில இந்திய இன்ஜினீயரிங் தொழில்நுட்பக் கவுன்சில் 1987 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சட்டப்படி கொண்டுவரப்பட்டது. ஆனால் 1983 ஆம் ஆண்டில் இருந்தே பொறியியல் கல்லூரிகளின் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த எக்சிகியூட்டிவ் ஆர்டரில் பல அறிவிப்புகளை வெளியிட்டது. இப்படி ஒரு சட்டத்தை பிறப்பிக்காமல்கூட மாநில கல்வி நிறுவனத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகவே அன்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அரசியல் சட்டத்தில் 7-வது அட்டவணையின்படி 66-வது பிரிவில் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு கைக்கொள்ள முடியும் என்கிற விதி உள்ளது. ஆனால், இதை மாற்றும் முனைப்பும் மாநில அரசுகளுக்கு இல்லை. மாநில அரசாகங்கள் ஊழல் மலிந்தவை. இதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதே மேல் என்கிற எண்ணம் பொதுமக்கள் மனத்தில் விதைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதில் உண்மை இல்லை. இன்று தமிழகத்தில் 700 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட காரணம் ஏ.ஐ.சி.டி.இ.யில் நடந்த ஊழலே. இப்படி இருக்க தற்போதைய பிரச்சினைக்கு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்து தேசிய கல்வி ஆணையத்தை நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமானால் மாநிலங்கள் தங்களுடைய தரப்பைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தைக் கைகாட்டிவிட்டு மத்திய அரசு ஒட்டுமொத்தக் கல்வியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்” என்கிறார் நீதிபதி கே.சந்துரு
கல்வியாளர்களின் கருத்துக் கேட்டார்களா?
கல்வி உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ந்து செயலாற்றி வரும் தேசிய அளவிலான மாணவர் அமைப்புகளில் ஒன்றான அகில இந்திய மாணவர் ஜனநாயக சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகுபாலா கூறுகையில், "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தந்த நிலப்பரப்பு, வரலாறு, சமூகப் பின்னணிக்கு ஏற்ப பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது பொருந்தாத திட்டம். ஒரு வேளை அறிவியல், கணிதப் பாடங்களை வேண்டுமானால் நாடு முழுவதுக்கும் ஒரே மாதிரியாகப் பரிந்துரைக்க முடியும். ஆனால், வரலாறு, இலக்கியப் பாடங்ளை ஒட்டுமொத்த தேசத்துக்கு எப்படி வகுக்க முடியும்? அனைத்து மாநிலங்களின் வரலாறுகளுக்குச் சமமான முக்கியத்துவம் அதில் எப்படி தர முடியும்? அதை நிர்ணயிப்பவர்கள் யாராக இருப்பார்கள்? தேசிய கல்வி ஆணையத்தை நிறுவும் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டிலேயே புதிய கல்விக் கொள்கை வரைவில் முன்வைத்தபோது அதற்கு நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை வைத்துக் கொண்டு கொல்லைப் புறமாக நுழைய மத்திய அரசு திட்டமிடுகிறது. சொல்லப்போனால் கல்விக் கொள்கையில் உச்ச நீதிமன்றம் தலையிடவே கூடாது. கல்வித் திட்டமானாலும் பாடத்திட்டமானாலும் அதை முடிவு செய்ய வேண்டியது மாநில அரசுகள்தாம். மாநில அரசுகள் கல்வித் திட்டத்தை வகுத்தால் மட்டுமே பலதரப்பட்ட மக்களுக்கான கல்வியைப் பன்மைத்துவத்துடன் வடிவமைக்க முடியும். இதற்கு முதல் கட்டமாக பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கேள்வி உள்ளது. பாடத்திட்டத்தை முடிவு செய்ய நாடு தழுவிய அளவில் கல்வியாளர்களின் கருத்துகளை அல்லவா முதலில் கேட்க வேண்டும்?" என்கிறார் சுகுபாலா.
ஒரு புரட்சியே தேவைப்படுகிறது!
வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமைக்கு உரிய தேசம் இந்தியா. இங்கு கல்வியை ஒரே குடைக்குள் கொண்டுவரும் முயற்சியானது கல்வி மீதும் ஜனநாயகத்தின் மீதும் அக்கறை கொண்டவர்களால் தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக மாநிலப் பட்டியலில் கல்வி கொண்டுவர வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோது கல்வி மாநிலப் பட்டியலில்தான் இணைக்கப்பட்டது. பிறகு 1976 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலையின்போது கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு (Concurrent list) மாற்றப்பட்டது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் கல்வி நிலையை நுட்பமாக ஆராய்ந்து சிறந்த கல்வியை நாட்டு மக்களுக்கு வழங்க பேராசிரியர்களையும் கல்வி வல்லுநர்களையும் கொண்டு கோத்தாரி தலைமையில் கல்விக் குழு 1964 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 21 மாத கால அவகாசத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு 287 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த கல்விக் குழுவின் பரிந்துரைகள் இன்றளவும் போற்றப்படுகிறது. கல்வியில் சிறந்த நாடுகளில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களையும், கல்விக்காக அந்நாடுகள் ஒதுக்கும் பட்ஜெடையும் சுட்டிக்காட்டி நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 6 சதவீதமாவது கல்விக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல மாநிலப் பட்டியலில் கல்வி இருப்பதே சிறந்த பாதை என்று உறுதியாக கோத்தாரி கமிஷன் வலியுறுத்தியது. "இந்தியக் கல்வி முறைக்குத் தீவிரமான மறுகட்டமைப்பும் கிட்டத்தட்ட ஒரு புரட்சியே தேவைப்படுகிறது" என்று சுட்டிக்காட்டினார் டாக்டர் டி.எஸ்.கோத்தாரி. அன்றைக் காட்டிலும் இன்று அவருடைய வார்த்தைகளுக்கு கூடுதல் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT