Published : 20 Jun 2020 07:43 AM
Last Updated : 20 Jun 2020 07:43 AM
10-ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் தொலைந்து போனதால் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கரோனா தீவிரம் காரணமாக தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து காலாண்டு, அரையாண்டு தேர்வு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பதிவேடுகளை ஜூன் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தற்போது கைவசம் இல்லை என கூறப்படுகிறது. அதேபோல், கணிசமான பள்ளிகளில் மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போயுள்ளன. இதனால் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து மீண்டும் தேர்வை எழுதவைத்து விடைத்தாள்கள் சேகரிப்பில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
கிருஷ்ணகிரி பள்ளிக்கு வந்த மாணவிகள்
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வின் தமிழ் உட்பட சில பாடங்களின் விடைத்தாள்கள் மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகளை நேற்று பள்ளிக்கு வரவழைத்து விடைத்தாள் தொலைந்து போன பாடங்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் கூறும்போது, ‘‘இதுதொடர்பாக மாணவிகள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மதிப்பெண் பதிவேட்டில் கையெழுத்திடவே வந்ததாகவும், தேர்வுகள் எழுதவில்லை என தெரிவித்தனர். எனினும், தொடர் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
இதுதவிர திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:
அரசுப்பள்ளிகள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை பெறுவதற்காக மாணவர்களுக்கு அதிகளவில் குறுந்தேர்வுகள் நடத்தி, அதன் மதிப்பெண் மற்றும் விடைத்தாள்களை முறையாக சேமித்து வைக்க கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதனால் கல்வியாண்டு இறுதியில் நடத்தப்பட்ட குறுந்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள்தான் தற்போது பெரும்பாலான பள்ளிகளிடம் கையிருப்பில் உள்ளன.
எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம்
இதுதவிர அனைத்து தேர்வு விடைத்தாளையும் சேமித்து வைக்க போதுமான இடவசதி பல பள்ளிகளில் இல்லை. இதையறிந்து சில மாவட்டங்களில் கையிருப்பில் உள்ள ஏதேனும் ஒரு தேர்வு விடைத்தாளை சமர்ப்பிக்க அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். ஏனெனில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் அனைத்து தேர்வு மதிப்பெண்களும் உடனுக்குடன் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லாததால் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றனர்.
அதேநேரம் விடைத்தாள்களை சமர்ப்பிக்காவிட்டால் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, நடவடிக்கைக்கு பயந்து வேறுவழியின்றி சில பள்ளிகளில் மறுதேர்வு நடத்தப்படுகின்றன. தற்போதைய சூழலில் விடைத்தாள் சமர்ப்பிக்கும் நடைமுறை தேவையற்றது. இது தவறுகள் நடைபெறவே வழிவகுக்கும். அனைத்தும் எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த முடிவை தேர்வுத்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சில பள்ளிகளில் விடைத்தாள்கள் கரையான் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. சிலபள்ளிகளில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் அந்த விடைத்தாள்களைத் தொலைத்துள்ளனர்.
இதனால் மறுதேர்வு நடத்தியதாக புகார்கள் வந்துள்ளன. கரோனா பரவல் சூழலில் விடைத்தாள் சேகரிப்புபணிக்காக மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT